'கைகள் இல்லாத கிரிக்கெட் வீரன்' : அமீர் ஹுசைனின் கதை

ஞாயிறு, 27 மார்ச் 2016 (21:06 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக உள்ளனர்.
 

 
ஆனால் கைகளே இல்லாமல், ஒரு கிரிக்கெட் அணியின் தலைவராக பரிமளிப்பவர் தான் அமீர் ஹுசைன்.
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் கிர்க்கெட் அணிக்குத் தான் அவர் தலைவர்.
 
எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் அமீர் ஹுசைன் இழந்தாலும் உறுதியை இழக்கவில்லை.
 

 
கைகள் இல்லாமல் அண்டை-அயலாரின் பரிகாசங்களுக்கு ஆளான அவர், விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் முதலீடாக்கி, வெற்றி எனும் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.
 
காஷ்மீரி சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளை ஏளனமாக பார்க்கும் வழக்கம் உள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவரிடம் கூறிய அவர், போராட்டத்தின் மூலமே கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற்றதாகக் கூறினார்.
 
இரண்டு கைகளையும் இழந்த நிலையில் யார் உதவியும் இன்றி வாழவேண்டும் என்ற உறுதிப்பாட்டின் காரணமாக சாப்பாட்டைக் கூட நாய் நக்கிச் சாப்பிடுவது போல உண்பதற்கு பழகிக் கொண்டதாகவும், தனது பாட்டி காலில் கரண்டியை பிடித்து சாப்பிடுவதற்கு பழக்கிக் கொடுத்ததாகவும் கூறுகிறார் ஹுசைன்.
 

 
கைகள் போனாலும் கால்களால் வெற்றியீட்ட முடியும் என பாட்டி கொடுத்த தன்னம்பிக்கையே கிரிக்கெட் வீரராக உருவாக உறுதுணையாக இருந்தது எனக் கூறும் அவர், காலால் பந்து வீசக் கற்றுக்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு அணியை வழிநடத்தும் அளவுக்கு இப்போது முன்னேறியுள்ளதாக பெருமையாகக் கூறுகிறார்.
 
எந்த அளவுக்கு கைகளால் பந்தை வேகமாக வீசமுடியுமோ அதே அளவுக்கு தன்னால் காலால் பந்தை வீசமுடியும் என அமீர் ஹுசைன் கூறுகிறார். ஆடுகளத்தில் பந்துகளைத் தடுப்பதற்கு தனது கால்களையும் உடலையும் செவ்வனே பயன்படுத்தவும் அவர் கற்றுக்கொண்டுள்ளார்.
 
ஆனால் கையில்லாமல் எப்படி அவரால் பேட்டிங் செய்ய முடியும்?. அதற்கும் ஒர் வழியை ஹுசைன் கண்டுபிடித்துள்ளார். கழுத்துக்கும் தோளுக்கும் இடையே மட்டையைபிடித்து பந்தை அடிக்க அவர் பழகிக்கொண்டுள்ளார்.
 

 
அங்கவீனர்களுக்கான போட்டி ஒன்றில் அவர் அதிகபட்சமாக எடுத்துள்ள ஓட்டங்கள் 28. அந்த எண்ணிகை சிறியதாக இருக்கலாம் ஆனால் அவரது உறுதியும் உழைப்பும் அளப்பரியது என்கிறார் அவரைச் சந்தித்த பிபிசியின் செய்தியாளர்.
 
ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளையும் ஹுசைன் வீழ்த்தியுள்ளது அவரது விடாமுயற்சிக்கு ஒரு உதாரணம் எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
 
பக்கத்து வீடுகளில் அவர்கள் தயவில் ஒரு அறையில் உட்கார்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்துவந்த ஹுசைன், இப்போது தான் விளையாடுவதை ஏராளமானோர் பார்க்க வருவது தனக்கு பெருமையாக உள்ளது என்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்