கூகுளுக்கு எதிரான பிரிட்டிஷ் வர்த்தகரின் சட்டப் பிணக்கு தீர்ந்தது

திங்கள், 24 நவம்பர் 2014 (20:23 IST)
இணையத்தில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறும் பிரிட்டிஷ் வர்த்தகர் ஒருவர், கூகுள் நிறுவனத்துக்கு எதிரான தனது சட்டப் பிணக்கைத் தீர்த்துக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

 
இணையதளப் பெருநிறுவனமான கூகுளுக்கு எதிராக டானியல் ஹெக்லின் (Daniel Hegglin), லண்டன் மேல்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
 
இணையத்தில் தன்னைப் பற்றி ஊர்-பேர் தெரியாத ஆள் ஒருவர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்ற நிலையில், அந்த அவதூறுத் தகவல்கள் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் தொடர்ந்தும் இணையதளத் தேடல் பக்கங்களில் வெளியாகி வருவதை நிறுத்த வேண்டும் என்று டானியல் ஹெக்லின் கோரியிருந்தார்.
 
தன்னை ஒரு கொலைகாரன் என்றும் சிறார்-பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர் என்றும் தன்மீது தவறான அவதூறுகள் சொல்லப்பட்டுள்ளதாக முன்னாள் வங்கித் துறை வணிகரான ஹெக்லின் கூறியுள்ளார்.
 
ஆனால், தங்களிடம் கேட்கப்பட்டால் மட்டுமே குறிப்பான இணையப் பக்க இணைப்புகளைத் தம்மால் அகற்ற முடியும் என்று கூகுள் நிறுவனம் கூறியிருந்தது.
 
இதனிடையே, இப்போது அவ்வாறான பக்கங்களின் இணைப்புகளைத் தாமாகவே முயற்சியெடுத்து அகற்றுவதற்கு கூகுள் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஹெக்லினின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
 
அவ்வாறே, ஹெக்லினின் விடயத்தை விதிவிலக்காக ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இணையத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்களை நெறிமுறைப்படுத்தும் வேலையைப் பொறுப்பேற்க முடியாது என்று கூகுள் நிறுவனத்தின் சார்பில் அதன் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்