கிளாஸ்கோ 2014 - பதக்கப் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா

சனி, 26 ஜூலை 2014 (14:08 IST)
கிளாஸ்கோ கொமன்வெல்த் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகளின் களநிலவரப் படி, (ஜிஎம்டி நேரம் 16.00 மணியளவில்) பதக்கப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடும்போட்டிகளுக்கு நடுவே முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
 
இங்கிலாந்து 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 23 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.
 
ஆஸ்திரேலியா 7 தங்கப் பதக்கங்களுடன் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
இம்முறை போட்டியை நடத்தும் ஸ்கொட்லாந்து 5 தங்கம் அடங்கலாக 11 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
 
இந்தியா நாலாவது இடத்தில் வியாழக்கிழமை பளுதூக்கலில் வென்ற 2 தங்கம், வெள்ளியன்று குறிபார்த்து சுடும்போட்டியில் வென்ற ஒரு தங்கம் அடங்கலாக 3 தங்கப் பதக்கங்களுடன் மொத்தமாக 10 பதக்கங்களுடன் இந்தியா நாலாவது இடத்தை வகிக்கின்றது.
 
ஜூடோவில் இரண்டு வெள்ளி ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் இந்தியா வசமுள்ளன.
 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குறிபார்த்தும் சுடும்போட்டியில் (ஏர் ரைபிஃள்- 10 மீட்டர் பிரிவில்) அபிநவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதற்கு முன்னதாக (மகளிர்- 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்) மாலைக்கா கோயல் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
 
இந்தியாவின் குறிபார்த்து சுடும் வீரர் அபிநவ் பிந்த்ராவின் கடைசி காமன்வெல்த் போட்டி இது. 
 
முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அபிநவ் பிந்த்ரா இதுதான் தனது கடைசி காமன்வெல்த் போட்டி என்று அறிவித்திருந்திருந்தார்.
 
இந்திய ஹாக்கி ஆடவர் அணியினர் இன்றைய முதலாவது போட்டியில் வேல்ஸ் அணியை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளனர்.
 
பதக்கப் பட்டியலில் இலங்கை இல்லை
 
இலங்கை அணியால் இதுவரை பதக்கப்பட்டியலை நெருங்கமுடியாத நிலையே தொடர்கின்றது.
 
குறிபார்த்து சுடும் போட்டியில் இலங்கை வீர வீராங்கனைகள் மிகவும் பின்தங்கிய இடங்களையே பெற்றுள்ளனர்.
 
டேபிள் டென்னிஸ் (மேசைப்பந்து) மகளிர் பிரிவு போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் வட அயர்லாந்தை இலங்கை தோற்கடித்துள்ளது.
 
ஜூடோ போட்டியில் 73 கிலோ எடைப்பிரிவில் இலங்கை வீரர் சாமர ரெப்பியல்லகே வனுவாட்டு அணி வீரரை தோற்கடித்திருந்தாலும் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரரிடம் தோல்வி கண்டார்.
 
இதுதவிர, குத்துச்சண்டை, நீச்சல் போட்டிகளிலும் இலங்கை வீரவீராங்கனைகள் கலந்துகொண்டிருந்த போதிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
 
ஆனால், இன்று காலை பார்படோஸ் அணியை 5-0 என்ற கணக்கில் பட்மிண்டன் குழுநிலைப் போட்டிகளில் இலங்கை வீர வீராங்கனைகள் தோற்கடித்தனர்.
 
உலகத் தரத்தில் முன்னிலையில் உள்ள மலேசிய அணியுடன் இலங்கை அணியினர் சனிக்கிழமை மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை ரக்பி-7 அணியினர் சனிக்கிழமை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, யுகாண்டா ஆகிய அணிகளுடன் மோதுகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்