ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்- விமர்சனம்

வெள்ளி, 14 ஜூலை 2017 (16:51 IST)
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தன் பழைய காதலிகளுக்கு திருமண அழைப்பைக் கொடுக்கப் புறப்படும்போதும், அந்த காதல்களைத் திரும்பிப்பார்க்கிறான் என்ற ஆட்டோகிராஃப் படத்தின் கதையை, சற்று நகைச்சுவையுடன் சொல்ல முயன்றிருக்கிறார்கள். அவ்வளவே.


 


ஜெமினி கணேசன் (அதர்வா) தன் பழைய காதலிக்கு திருமண பத்திரிகையை கொடுக்க மதுரைக்கு வருகிறான். அங்கே சுருளிராஜனை (சூரி) சந்திக்கிறான். பிறகுதான் தெரிகிறது, ஜெமினி கணேசனுக்கு பல காதலிகள் இருந்தார்கள் என்பது. ஜெமினி இவர்களை எப்படிக் காதலித்தான், பிரிந்தான் என்பதே படத்தின் சுருக்கமான கதை.

ஏற்கனவே சீரியஸாக சொல்லப்பட்ட கதையை நகைச்சுவையாக சொல்ல முயன்றது சரிதான். ஆனால், எந்தக் காட்சியிலும் அழுத்தமே இல்லை என்பதால் படத்தின் பெரும்பாலான நேரங்களில் நெளிய வைக்கிறது திரைக்கதை.ஒரு வீட்டிற்கு புதிதாக குடிவரும் இரண்டு பெண்கள் ஜெமினியைப் பார்த்தவுடனேயே விழுந்து விழுந்து காதலிக்க ஆரம்பிப்பது ஏன் என்பதற்கு ஏதாவது ஒரு சிறிய காரணத்தையாவது சொல்ல வேண்டாமா? இரண்டாவது பாதியில் வரும் இரண்டு பெண்களும் இதேபோல எந்தக் காரணமுமின்றி காதலில் விழுகிறார்கள். அதிலும், கதாநாயகன் ஒரு பிச்சைக்காரனுக்கு போர்வை போர்த்துவதைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார் ஒருவர். இம்மாதிரி காட்சியை எத்தனை படங்களில் பார்த்திருப்போம்?




படம் முடிவதற்கு அரை மணி நேரம் இருக்கும்போதுதான் படம் சூடுபிடிக்கிறது. ஆனால், அதற்குள் படம் பார்ப்பவர்கள் களைத்துப்போய்விடுகின்றனர். ஒரே மாதிரியாக நான்கு காதல்கள், மேலோட்டமான திரைக்கதை ஆகியவற்றால் ரொம்பவுமே பொறுமையை சோதிக்கிறது படம். படம் முழுக்க அதர்வா துள்ளலுடன் வருகிறார். ஆனால், பல காட்சிகளில் அவரது நடிப்பு பொருத்தமாக இல்லை.

நாயகிகளில் ரெஜினா கஸன்ட்ராவும், புதுமுகம் அதிதியும் படத்திற்கு வண்ணம் சேர்க்கிறார்கள். அறிமுகமாவதிலிருந்தே படம் பார்ப்பவர்களைச் சிரிக்கவைக்க சூரி கடும் முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால், இறுதிப் பகுதியை நெருங்கும்போதுதான் அவருக்கு வெற்றி கிடைக்கிறது.


டி இமானின் இசையில் வரும் பாடல்கள் ஏற்கனவே கேட்டதைப் போல இருப்பதுதான் அவற்றின் பலமும் பலவீனமும். படத்தின் மிகப் பிரகாசமான அம்சம், ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு.

இரண்டு மணி நேரம் காத்திருந்தால், ஒரு அரை மணி நேரத்திற்கு சிரித்துவிட்டு வரலாம்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்