நட்புக்கு காரணம் மரபணுக்களா?

புதன், 16 ஜூலை 2014 (10:33 IST)
நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக்களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவுகளை அவர்கள் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
 
அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில் இவர்கள் மனித இதயம் தொடர்பிலான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 2000 பேரிடம், இவர்கள் தமது மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன் படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப்போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர். அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களைவிட குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் அதிகமாக ஒரே மாதிரி இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.
 
அதாவது முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை விட நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். வழக்கமாக இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன் அல்லது சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும். அதுவும் கூட தலைமுறைகள் கடந்து செல்லச் செல்ல, இந்த மரபணு ஒத்துப்போகும் தன்மையும் படிப்படியாக குறையத்தொடங்கும். அப்படி பார்க்கும்போது, ஒருவரின் நான்கு தலைமுறைகள் கடந்த கொள்ளுத்தாத்தா--பாட்டிக்குப் பிறந்த இன்றைய நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசுகளுக்கு மத்தியில் என்ன மாதிரியான மரபணு ஒற்றுமைகள் காணப்படுமோ அதே மாதிரியான ஒற்றுமைகள் நல்ல நண்பர்கள் மத்தியிலும் காணப்படுவதாக இந்த இரண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

 
எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூற்றையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே தங்களின் கண்டுபிடிப்பு என்றும் இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
 
சக விஞ்ஞானிகள் உடன்படவில்லை
 
ஆனால் இவர்களின் இந்த கண்டுபிடிப்பை சகவிஞ்ஞானிகள் அப்படியே ஏற்க முடியாது என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரு சிறு நகரில் இருப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் இவான் சார்னி, இவர்கள் எடுத்த மாதிரிகளில் பெரும்பான்மையானவர்கள் ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்றும் அதனாலேயே கூட இந்த ஆய்வின் முடிவுகள் இப்படி வந்திருக்கலாம் என்றும் வாதாடுகிறார்.
 
மேலும் இந்த ஆய்வில் பெங்கேற்றவர்கள் யாரும் யாருக்கும் உறவு முறையானவர்கள் அல்ல என்பதையும் இந்த ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலையில், இப்படி நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போவதாக பொத்தாம் பொதுவில் சொல்வது சரியான அறிவியல் அணுகுமுறையல்ல என்றும் அவர் கூறுகிறார்.
 
இவரது விமர்சனத்தை மறுக்கும் ஆய்வாளர்கள் ஜேம்ஸ் பவுலர் மற்றும் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ், தாங்கள் செய்த ஆய்வின் மாதிரிகளில் சுமார் 907 ஜோடி நண்பர்களைத் தனியாக பிரித்து, அவர்களுக்கு இடையில் எந்தவிதமான ரத்த உறவும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு அவர்களின் மரபணுக்களை ஒப்பிட்டு பார்த்ததாக தெரிவிக்கின்றனர். அப்போதும் நண்பர்களுக்கு இடையில் மரபணுக்களின் ஒற்றுமை கூடுதலாக இருந்ததாக இவர்கள் தெரிவித்தனர்.
 
ஆனாலும் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் மத்தியில் இவர்களின் இந்த விளக்கங்கள் இன்னமும் ஏற்கப்படவில்லை. இவர்கள் ஆய்வு மேற்கொண்டவிதம், அதில் கடைபிடித்த அளவுகோல்கள் குறித்த கேள்விகள் தொடரவே செய்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்