யுபிஐ பரிவர்த்தனை முறையைக் குறிவைக்கும் மோசடி கும்பல் - அச்சத்தில் சிறு வியாபாரிகள்

Prasanth Karthick

புதன், 17 ஜூலை 2024 (14:32 IST)

பரபரப்பான மும்பை சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக அருண்குமார் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
 

இது அவ்வளவு எளிதான தொழில் அல்ல.
 

“சாலையோரக் கடைகளில் வியாபாரம் செய்வது மிகப்பெரிய சவால். நம் கடையில் வைக்கப்பட்டிருக்கும் சரக்குகள் கொள்ளை அடிக்கப்படுமோ என்ற அச்சம் எப்போதுமே இருக்கும். மேலும் என்னிடம் கடைக்கான உரிமம் இல்லை, எனவே அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் வந்து கடையை காலி செய்யலாம்” என்று தன் அன்றாட வாழ்க்கையை விவரிக்கிறார் அருண்.
 

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில், அவரது பணியின் ஓர் அம்சம் மட்டும் முன்பை விட எளிதாகிவிட்டது.
 

அருண் கூறுகையில், “கோவிட் தொற்று நோய் சூழலுக்கு முன்புவரை, அனைத்து பரிவர்த்தனைகளும் ரொக்கமாக செய்யப்பட்டது.. ஆனால் இப்போது அனைவரும் யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்துகிறார்கள். குறியீட்டை (Code) ஸ்கேன் செய்து சில நொடிகளில் பணம் செலுத்திவிடுகிறார்கள். “
 

"எனவே பணத்தை கையாள்வதில் சிக்கல் இல்லை. மேலும் சில்லறைகள் கொடுக்கும் சிரமத்தையும் குறைக்கிறது. இது எனது பணியையும் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது.” என்று விளக்கினார்.
 

மிகப்பெரிய 'நிகழ் நேர கட்டண’ சந்தையாகும் இந்தியா


 

2016 இல் மத்திய ரிசர்வ் வங்கிக்கும், வங்கித் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பாக யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) தொடங்கப்பட்டது. இது மின்னணுவியல் பண பரிமாற்று முறை ஆகும்.
 

இது ஒரு செயலியின் (app-based payment)மூலம் செயல்படும் கட்டண முறை. இதன் மூலம் பயனர் பணத்தை அனுப்பலாம் அல்லது பெறலாம். அதே போல் ஒரு பில்களையும் செலுத்தலாம்.
 

யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, ​​வங்கி விவரங்கள் அல்லது வேறு எந்த தனிப்பட்ட தகவலையும் வழங்க வேண்டிய அவசியமில்லை. மேலும் இது `கட்டணமற்றது’.

யுபிஐ பணம் செலுத்தும் முறை இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வருகிறது. இந்தியா மிகப்பெரிய 'நிகழ்நேர பணம் செலுத்தும்' (real time payment) சந்தையாக மாறியுள்ளது.
 

இந்த ஆண்டு மே மாதத்தில், யுபிஐ வாயிலாக 14 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 பில்லியன் அதிகமாகும்.
 

ஆனால் அதன் எளிமையான பயன்பாடு, மோசடி செய்பவர்களுக்கும் சாதகமான சூழலை அமைத்துக் கொடுக்கிறது.
 

யுபிஐ மோசடிகள் எப்படி நடக்கின்றன?


 

டெல்லியைச் சேர்ந்த `ஃபியூச்சர் க்ரைம் ரிசர்ச் ஃபவுண்டேஷனின்’ நிறுவனர் ஷஷாங்க் சேகர் கூறுகையில், "டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வசதியானவை தான், ஆனால் அவற்றிலும் சில குறைபாடுகள் உள்ளது" என்றார்.
 

``மோசடி செய்பவர்கள் மக்களை சிக்க வைக்க பல வழிகளை பின்பற்றுகின்றனர். பணம் செலுத்துவதற்கு தேவையான யுபிஐ பின் எண்ணை அறிய அவர்கள் பல தந்திரங்களை செய்து முயற்சிக்கின்றனர். சில மோசடிக்காரர்கள் முறையான வங்கிச் செயலிகளைப் போலவே போலியான யுபிஐ செயலிகளை உருவாக்கி, உள்நுழையும் விவரங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைத் திருடுகின்றனர்.” என்று விளக்கினார்.
 

மேலும் "துரதிர்ஷ்டவசமாக, நாட்டில் டிஜிட்டல் பண பரிமாற்றம் பரவலாக பயன்பாட்டுக்கு வந்த அதே வேகத்தில், டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் இணையம் தொடர்பான பாதுகாப்புத் தகவல்கள் மக்களைச் சென்றடையவில்லை" என்று அவர் நம்புகிறார்.
 

ஜனவரி 2020 முதல் ஜூன் 2023 வரை நடந்த நிதி மோசடி வழக்குகளில் ஐம்பது சதவிகிதம் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறுகிறார்.
 

அரசாங்க தரவுகளின்படி, ஏப்ரல் 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் 95,000 க்கும் மேற்பட்ட யுபிஐ தொடர்பான மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 77,000 அதிகம்.

 

யுபிஐ வாயிலாக மோசடியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை


 

பிகாரில் வசிக்கும் ஷிவ்காளி அப்படிப்பட்ட டிஜிட்டல் பணப் பரிமாற்ற மோசடியால் பாதிக்கப்பட்டார். அவரால் முழுத் தொகை செலுத்தி வாங்க முடியாத ஒரு பழைய இருசக்கர வாகனத்தை வாங்க விரும்பினார்.
 

இந்நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில், முகநூலில் ஸ்கூட்டர் விற்பனை தொடர்பான அவருக்கு 'லாபகரமான' விளம்பரம் ஒன்றை ஷிவ்காளி கண்டார்.
 

"நான் சற்றும் யோசிக்காமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்." என்று அவர் கூறுகிறார்.
 

அந்த விளம்பரத்தை கிளிக் செய்த பிறகு தொடர்பு எண் கிடைத்தது, இருசக்கர வாகனத்தின் உரிமையாளரிடம் பேசினார். அவர் சுமார் ரூ. 1900 கொடுத்தால், வாகனத்தின் முறையாக ஆவணங்களை அனுப்புவதாகக் கூறினார்.
 

எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்ததால், ஷிவ்காளி ஸ்கூட்டர் உரிமையாளருக்கு உடனடியாக அந்த பணத்தை யுபிஐ மூலம் அனுப்பினார்.
 

இந்த ஒப்பந்தத்தின் போது, உரிமையாளர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட நபர் ​​ஷிவ்காளியிடன் பேசி பேசி, படிப்படியாக மொத்தம் சுமார் ரூ.16 ஆயிரம் வாங்கிவிட்டார். ஆனால் கடைசிவரை ஷிவ்காளியின் கைகளுக்கு ஸ்கூட்டர் கிடைக்கவில்லை.
 

இறுதியாக ஷிவ்காளி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
 

அவர் கூறுகையில், "எனக்கு படிப்பறிவு இருக்கிறது, உலகில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும் என்பதால், என்னை யாராலும் ஏமாற்ற முடியாது என்று நான் நினைத்தேன். ஆனால் மோசடி செய்பவர்கள் மிகவும் புத்திசாலிகள். மற்றவர்களை தங்கள் வார்த்தைகளின் மூலம் ஏமாற்றும் கலை அவர்களுக்கு தெரியும். ” என்றார்.
 

இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் யுபிஐ பயனர்களை மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகின்றன.
 

தற்போது மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற விரும்பினால், வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும்.
 

இதற்கு யார் பொறுப்பு?


 

நிதிக் குற்றங்கள் தொடர்பான விஷயங்களில் நிபுணரான டாக்டர் துர்கேஷ் பாண்டே கூறுகையில், “இந்த பிரச்னையின் வேர்கள் மிகவும் ஆழமானவை. வங்கிகளும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதில் அதிகபட்ச பொறுப்பை ஏற்க வேண்டும். விசாரணை செய்வதில் அலட்சியம் காட்டுவதால், மோசடி செய்பவர்களை பிடிக்க முடிவதில்லை.
 

“ஆனால் வங்கிகளுக்கான முக்கிய சவால் என்னவென்றால், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அதே சமயத்தில் எளிதாக வணிகம் செய்வதையும் சரிபார்ப்பு செயல்முறைகளையும் சமநிலைப்படுத்த வேண்டும். வங்கிகள் மிகவும் கண்டிப்பான செயல்முறைகளைக் கொண்டு வந்தால், சமூகத்தின் பெரும் பகுதியினர் வங்கி வசதிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே வங்கி சேவைகளை எளிமைப்படுத்த வேண்டிய அதே நேரத்தில் சரிபார்ப்பு செயல்முறைகளையும் (process of verification) மேம்படுத்த வேண்டும்” என்றார்.
 

பெரும்பாலான மோசடி வழக்குகளில், வங்கிகள் மட்டும் முழு பொறுப்பு என்று சொல்ல முடியாது என்கிறார் டாக்டர் பாண்டே.
 

அவர் கூறுகையில், "இந்த மோசடி வங்கிகள் தொடர்பானது, ஆனால் மோசடி செய்பவர்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவது மக்கள் தான். அத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர் மற்றும் வங்கி, இருவருமே இழப்பை பொறுப்பேற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
 

இதுபோன்ற சிக்கல்கள் இருக்கும் நிலையில், அனைவருக்கும் வங்கிச் சேவைகள் எளிதில் கிடைக்காத கிராமப்புறங்களில் யுபிஐ பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படுகிறது.

 

கிராமங்கள் முதல் வெளிநாடுகள் வரை!


 

ராஜஸ்தானில் வசிக்கும் பூனம் உண்ட்வால், வழிகாட்டுதல் மையம் (guidance center ) நடத்தி வருகிறார், அங்கு இணையம் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்குகிறார்.
 

அவர் கூறுகையில், “எங்களில் பெரும்பாலோர் அதிகம் படித்தவர்கள் அல்லர். ஸ்மார்ட்போன்களை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியாது. இன்றைய காலகட்டத்தில், அலைப்பேசிகள் மக்களுடன் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தும் சாதனம் மட்டுமல்ல, வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பயன்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் மூலம் வங்கி சேவைகள் இப்போது உங்கள் விரல் நுனியில் உள்ளது. இதனை நான் மக்களுக்கு புரிய வைக்கும் வேலையை செய்து வருகிறேன்" என்றார்.
 

உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த `யுபிஐ’ உதவும் என்று பூனம் நம்புகிறார்.
 

பூனம் கூறுகையில், ​​“என்னைப் போன்ற பல பெண்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே சிறு தொழில்கள் செய்து வருகின்றனர். இப்போது நாம் யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் எனது மையத்திற்கு வந்து பரிவர்த்தனைகள் செய்கின்றனர்.
 

கிராமப்புறங்களில் பரவலாக பயன்படுத்தப்படுவதுடன், யுபிஐ கிராமங்களில் இருந்து வெளிநாடுகளையும் சென்றடைகிறது.
 

பூட்டான், மொரிஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் யுபிஐ கட்டணங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.
 

இந்த ஆண்டு, ஈபிள் கோபுரத்திற்கான டிக்கெட் விற்பனைக்கு யுபிஐ கட்டணங்களை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் ஐரோப்பாவில் யுபிஐ கட்டணங்களை ஏற்கும் முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
 

இனி மும்பை பழக்கடைக்கு வருவோம்..
 

பழ வியாபாரி அருண்குமார் ரொக்கமாக பணத்தை கையாள வேண்டியதில்லை என்று மகிழ்ச்சி அடைந்தாலும் அவருக்கும் பரிவர்த்தனை தொடர்பான சில பிரச்னைகள் இருக்கின்றன.
 

அவரின் கடை இருக்கும் பகுதியில் நல்ல இணைய இணைப்பு இல்லாதபோது, ​​வாடிக்கையாளர்கள் தற்செயலாக அல்லது வேண்டுமென்றே பணம் செலுத்தாமல் போகலாம் என்பது அவரின் கவலை.
 

அவர் கூறுகையில், “என்னைப் போன்ற ஒரு சிறிய விற்பனையாளருக்கு யுபிஐ மூலம் பணம் எடுப்பது மிகவும் எளிதாகிவிட்டது. ஆனால் மோசடி செய்துவிடுவார்கள் என்ற பயம் எப்போதும் என்னுள் இருக்கும். யுபிஐ மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதைப் பற்றி நான் செய்திகளில் கேள்விப்படுகிறேன். என்னைப் போன்ற சிறு வியாபாரிகள் நஷ்டம் அடையாமல் இருக்க நல்ல வழிகள் பிறக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்