பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை: 2022 விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஐந்து பேர்

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (14:40 IST)
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது நிகழ்வை நான்காவது முறையாக இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது. அதற்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டிற்கான ஐந்து போட்டியாளர்களின் பட்டியலில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகாட், பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாரா தடகள வீராங்கனையும் 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஏக்தா பியான், பாரா தடகள வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் அளித்தமைக்காக பிபிசியை பாராட்டினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திறமைகள் உள்ளன, அவை கொண்டாடப்பட வேண்டும், அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற சக்திவாய்ந்த செய்தியை இது கொண்டு செல்கிறது என்றார்.

மேலும் அவர், "இத்தகைய அங்கீகாரம் பாரா விளையாட்டுகளை உள்ளடக்கிய பொது விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகிறது. இது பாரா தடகள வீராங்கனைகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வழிவகுக்கும் என்று நம்புகிறேன். பல மாற்றுத்திறனாளிகளை விளையாட்டுகளில் பங்கேற்க இது ஊக்குவிக்கும்," என்றார்.

குத்துச்சண்டை வீரரும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான விஜேந்தர் சிங் பெனிவால், எங்கள் வீராங்கனைகளின் சாதனைகள் பாராட்டப்படுவதையும் அவர்களுடைய கதைகள் தற்போது பிபிசியுடைய இந்த முயற்சியின் வாயிலாக மக்களைச் சென்றடைவதையும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

"எங்கள் வீராங்கனைகள், களத்தில் தங்கள் திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்கள்தான் உண்மையான போராளிகள். அவர்கள் எவ்வளவு மரியாதைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் கணக்கிடுவது எளிதானதல்ல," எனக் கூறினார்.

பிபிசி நியூசின் இந்தியத் தலைவர் ரூபா ஜா, இன்றைய செய்தியாளர் சந்திப்பில், "இந்த விருது இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கௌரவிப்பதோடு, இந்தியாவில் விளையாட்டுத் துறையில் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது," என்றார்.

பிபிசியின் இந்திய மொழி இணையதளங்களில் அல்லது பிபிசி ஸ்போர்ட் இணையதளத்தில் உங்களுக்குப் பிடித்தமான இந்த ஆண்டின் இந்திய விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களிக்கலாம்.

2023, பிப்ரவரி 20ஆம் தேதியன்று இரவு 11:30 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். மேலும், வெற்றியாளர் மார்ச் 5, 2023 அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார்.

அனைத்து விதிமுறைகள், நிபந்தனைகள், தனியுரிமை அறிவிப்புகளும் இணையதளத்தில் உள்ளன.

பிபிசி இந்திய மொழி இணையதளங்கள், பிபிசி ஸ்போர்ட் இணையதளத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதிகமான வாக்குகளைப் பெற்ற விளையாட்டு வீராங்கனை இந்த ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாக அறிவிக்கப்படுவார்.

பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகள்

மீராபாய் சானு

பளு தூக்குதல் சாம்பியனான சாய்கோம் மீராபாய் சானு 2021ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் விளையாட்டு வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து 2022இல் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

2016ஆம் ஆண்டு ரியோ விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பிட்ட எடையைத் தூக்கத் தவறியதில் இருந்து மீராபாயின் பயணம் நெடுந்தூரம் வந்துள்ளது. கிட்டத்தட்ட அவர் விளையாட்டில் இருந்து விடை பெற்றுவிட்டார். ஆனால், 2017 உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அவர் தனது திறமையை நிரூபித்தார்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஒரு தேநீர் கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்தவர் மீராபாய். அவர் தனது விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் அதிகமான நிதி நெருக்கடிகளைச் சந்தித்தார். ஆனால், அனைத்து சோதனைகளையும் சமாளித்த அவர், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆனார். மீராபாய் சானு 2021ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.

சாக்ஷி மாலிக்

2016 ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் சாக்ஷி. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நான்காவது இந்தியப் பெண் இவர். சாக்ஷி எப்போதும் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார்.

அவருடைய தாத்தாவும் ஒரு மல்யுத்த வீரர் என்பதை அறிந்ததும் உத்வேகம் கொண்டார். அவர் பதக்கம் வென்ற ரியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு, சாக்ஷியின் விளையாட்டு வாழ்க்கை பின்னடைவை சந்தித்தது.

ஆனால், அவர் 2022இல் பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று அசத்தலான மறுபிரவேசத்தை நிகழ்த்தினார். சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

வினேஷ் போகாட்

மல்யுத்தத்தில் இரண்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண், வினேஷ் போகாட். இவர், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை.

பல்வேறு எடைப் பிரிவுகளில் பதக்கங்கள் வந்திருந்தாலும், வினேஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது, அவரது சமீபத்திய வெற்றி.

அவரது உறவினர்களான கீதா, பபிதா போகாட் ஆகியோரும் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளனர். இதன்மூலம் பல சர்வதேச பதக்கங்களை வென்ற பெண் மல்யுத்த வீரர்களைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவராகத் திகழ்கிறார் வினேஷ் போகாட்.

பிவி சிந்து

பேட்மிண்டன் வீராங்கனை புசர்லா வேங்கட சிந்து (பி.வி.சிந்து), ஒலிம்பிக்கில் இரண்டு தனிநபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண். டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்றது, அவருடைய இரண்டாவது ஒலிம்பி வெற்றி. அவர் 2016இல் ரியோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பி.வி.சிந்து 2022 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்.

முன்னதாக, அவர் 2021இல் உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் சர்வதேச டூர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். 2019ல் சிந்து உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியராக வரலாறு படைத்தார். அவர் செப்டம்பர் 2021இல் தனது 17 வயதில் உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார்.

பொது மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு முதல் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.

நிகத் ஜரீன்

2011ல் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை வென்ற நிகத் ஜரீன், 2022ல் பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியனாக உயர்ந்தார். பர்மிங்ஹாம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஃப்ளைவெயிட் பிரிவில் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கத்தையும் நிகத் வென்றார். அவர் இந்தியாவில் நடந்த தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துடன் 2022ஆம் ஆண்டை முடித்தார். தனது ஆற்றல் மிக்க மகள், அவருடைய ஆற்றல் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்க வேண்டும் என்பதற்காக, ஜரீனின் தந்தைதான் அவரை விளையாட்டில் அறிமுகப்படுத்தினார்.

12 வயதில் சண்டையின்போது கண்களில் கருவளையம் ஏற்பட்டது, திருமண வாய்ப்பு குறித்து உறவினர்கள் முன்வைத்த மோசமான கருத்துகள் ஆகியவற்றால் அவரது தாய் அடைந்த ஆரம்ப கால கவலைகளை ஒதுக்கிவிட்டு, அவருடைய கனவுகளைப் பின்பற்றுமாறு அவரை ஊக்குவித்தார் அவரது தந்தை. அதன் பிறகு நிகத் தயக்கமின்றி ஓடிக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்