தமிழக மீனவர்களின் மரண தண்டனையை எதிர்த்து போராட்டம்

சனி, 1 நவம்பர் 2014 (09:58 IST)
போதைப் பொருள் கடத்திய வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
 
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளான நம்புதாளை, சாயல்குடி, மூக்கையூர், தொண்டி ஆகிய பகுதிகளில் உள்ள நாட்டுப் படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை.
 
ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு வரை போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று இந்த விவகாரத்தில் அடுத்தகட்டம் குறித்து முடிவெடுப்பதற்காக ராமேசுவரத்தில் 11 மீனவ சங்க பிரதிநிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தின் முடிவில், விசைப் படகுகள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்வது என்றும் நாளை தங்கச்சி மடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
 
மீனவர்களின் கோரிக்கை குறித்து, விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் ஜேசு ராஜாவிடம் கேட்டபோது, ஐந்து மீனவர்களின் தண்டனையும் ரத்துசெய்யப்பட வேண்டும் என்றும், இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களும் பிடித்துவைக்கப்பட்டிருக்கும் படகுகளும் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.
 
பொய்யான வழக்கின் அடிப்படையில் தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ராமேஸ்வரம் பகுதியில் நேற்று நள்ளிரவு வரை போராட்டம் நீடித்ததால், ராமேஸ்வரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
 
நள்ளிரவில் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, இன்று காலை முதல் ராமேசுவரத்தில் பேருந்து போக்குவரத்து சீரடைந்தது.
சேதப்படுத்தப்பட்ட ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டதை அடுத்து, பகல் 12 மணியிலிருந்து ரயில் போக்குவரத்தும் துவங்கியது.
 
சென்னையிலும் இது தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றன. ஐந்து மீனவர்களையும் விடுவிக்கக் கோரி தமிழக வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருக்கும் இலங்கைத் துணைத் தூதரகத்தை இன்று காலையில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
 
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் எட்டுப் பேருமே விடுவிக்கப்பட வேண்டுமென அந்த இயக்கத்தின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
 
துப்பாக்கிச் சூடு நடத்தினால், இந்தியாவில் பெரிய பிரச்சனையாக உருவெடுப்பதால், இம்மாதிரி சட்டத்தைப் பயன்படுத்தி தூக்குத் தண்டனை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஐந்து மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்