ஐந்தாம் ஹென்றி காலப் போர்க்கப்பல் ஆற்றில் கண்டுபிடிப்பு

திங்கள், 12 அக்டோபர் 2015 (21:42 IST)
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தை ஆண்ட ஐந்தாம் ஹென்றிக்காகக் கட்டப்பட்ட போர்க்கப்பல் ஒன்றின் எஞ்சிய பாகங்களைக் கண்டுபிடித்திருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


 
பிரான்சின் கடல் மேலாண்மையைத் தகர்க்க உதவிய , பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே நடந்த நூறாண்டுப் போரின் போது நடந்த இரண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல் யுத்தங்களில், ஹோலிகோஸ்ட் என்ற இந்தக் கப்பல் பங்கேற்றது .
 
இந்தக் கப்பல், இங்கிலாந்து-பிரான்ஸ் வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற 1415 ஆண்டு நடந்த அஜேன்கூர் யுத்தம் நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் இங்கிலாந்தின் கடல் படையில் சேர்க்கப்பட்டது.
இந்தக் கப்பலின் சிதிலங்கள் தென் இங்கிலாந்தில் உள்ள ஹேம்பிள் நதியில் சேற்றில் வெகு ஆழத்தில் புதையுண்டிருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
 
வரலாற்றாய்வாளர், டாக்டர் இயான் ஃப்ரையல், இந்த இடத்தின் மீது மேலிருந்து எடுக்கப்பட்ட படங்களை ஆராய்ந்த போது முதன் முதலாக இந்த சிதிலங்களை கண்டுபிடித்தார். இதே இடத்தில்தான், 1930களில், ஐந்தாம் ஹென்றியின் மற்றொரு கப்பலான, தெ க்ரேஸ் டியூ என்ற கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்தக் கப்பலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, ஒலி அலைகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த சிதிலங்கள் மீது பெரியதொரு ஆய்வு நடத்தப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்