இராக் வான்பரப்பில் பறப்பதை நிறுத்துகிறது எமிரேட்ஸ்

செவ்வாய், 29 ஜூலை 2014 (11:06 IST)
மத்திய கிழக்குப் பகுதியின் மிகப்பெரும் விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், இராக் வான்பரப்பின் மீது பறப்பதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்திலிருந்து தப்புவதற்காகவே இந்த நடவடிக்கை என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
 
உக்ரைன் வான்பரப்பில் மலேசிய விமானம் எம் எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே எமிரேட்ஸின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
 
தற்போது இராக்கின் வான்பரப்பின் வழியாக பறந்து செல்லும் தமது விமானங்களை மாற்றுப்பாதைகளில் செலுத்துவது குறித்த வழிமுறைகளை தாங்கள் வகுத்து வருவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
எனினும் மாற்றுப் பாதைகளை ஏற்பாடு செய்வதற்கு சில நாட்களாகும் என்றும் அவர் கூறுகிறார்.
 
போர் நடக்கும் பகுதிகளின் வான்பரப்பில் பயணிப்போர் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து விவாதிக்க, கனடாவின் மாண்ட்ரியேல் நகரில், உலக விமான சேவை வல்லுநர்கள் பங்குபெறும் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக எமிரேட்ஸின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்