இபோலா தடுப்பு நடவடிக்கைகள்: ஜெனீவாவில் அவசரக் கூட்டம்

புதன், 22 அக்டோபர் 2014 (19:15 IST)
பரவிவரும் இபோலா நோயைக் கட்டுப்படுத்த நடந்துவரும் முயற்சிகளை மதிப்பிடும் நோக்கில் உலக சுகாதார கழகம் ஜெனீவாவில் அவசர கூட்டம் ஒன்றை நடத்துகிறது.



இபோலாவினால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளான கினீ, சியர்ரா லியோன் மற்றும் லைபீரியாவில் நோய் தொடர்ந்தும் பரவி வருகிறது.
 
நோய் பரவ ஆரம்பித்த நேரத்தில் உலக சுகாதார கழகம் மிகவும் மந்தமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.
 
விமான நிலையங்கள் போன்ற சர்வதேச பயண முனையங்களில் நோய்த்தொற்றுள்ளவர்களை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகள் பற்றியும், கடுமையான பயணக் கட்டுப்பாட்டு விதிகள் தேவையா என்பது பற்றியும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.
 
பரீட்சார்த்த ரீதியில் புதிதாக உற்பத்திசெய்யப்பட்டுள்ள இபோலா தடுப்பு மருந்து ஒன்றின் முதல் தொகுதிகள் புதனன்று சுவிட்சர்லாந்தை வந்து அடையவுள்ளன.
 
ஆனால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, அனுமதி உரிமம் வழங்கப்பட்ட இபோலா தடுப்பு மருந்து புழக்கத்துக்கு வர மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ ஆகும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்