குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக்கோளாறுகள்!

வியாழன், 15 அக்டோபர் 2015 (18:49 IST)
அதிகமான மதுபானம் அருந்துவதால், மூளையின் அமைப்பிலேயே கோளாறுகள் ஏற்படுகின்றன என்றும், மேலும் நரம்பு - மனோவியல் மண்டலங்கள் பழுதடைவதாகவும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
 

 
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஸ்கூல் ஆஃப் மெடிசின் மனோவியல் மற்றும் நடத்தை விஞ்ஞான பேராசிரியை சல்லிவான், நீண்ட நாளைய மதுபான பழக்கத்தால் மூளையில் அமைப்பு ரீதியான மாற்றங்களும், நரம்பு - மனோவியல் மண்டல கோளாறுகளும் ஏற்படுவதாகக் கூறுகிறார்.
 
பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் அவதிப்படுவதும், நிகழ்வுகளை வரிசைக்கிரமத்துடன் சொல்வதிலும், செய்வதிலும், ஞாபக மறதியும், ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யும் திறனையும் மது அடிமைகள் இழக்கின்றனர் என்கிறார் சல்லிவான்.
 
நினைத்ததைச் செயலாற்றும் மற்றும் அங்க அசைவுகளை ஒழுங்குபடுத்தும் மூளைப்பகுதியில் உள்ள வெளிப்புற கார்டெக்ஸ் நீண்ட நாளைய மதுப்பழக்கத்தால் பாதிப்படைகிறது என்று இவ்வாராய்ச்சியாளர் கூறுகிறார்.
 
மூளையின் இப்பகுதியில் ஒரு இடத்தில் ஏற்படும் மாற்றம், அதன் சுற்றுப்புறம் அனைத்தையும் பாதிக்கிறது. இதனால் செயல் அளவிலும், அமைப்பு அளவிலும் சீர்கேடான மாற்றங்கள் ஏற்படுகிறது.
 
25 மது அடிமைகளை எம்.ஆர்.ஐ. மூலம் பரிசோதித்த ஆராய்ச்சியாளர் சல்லிவான், தகவல்களை உள்வாங்கி அதன்மூலம் நமது செயல்களை தீர்மானிக்கும் fronto - cerebellar பகுதிகளில் இவர்களுக்கு பழுதுகள் ஏற்படுவதைக் கண்டார்.
 
இவர்களில் பலருக்கு பிரச்சனைகள் தீர்ப்பதில் மற்றும் ஒரு இடத்தில் ஒரே நிலையில் இவர்களால் இருக்க முடியாததும், ஞாபக மறதியும் இருப்பது தெரிய வந்தது. மேலும் நினைத்த காரியத்தை இவர்களால் செயலாற்ற முடியாததையும் இவ்வாராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்