கனிமொழி 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா? ஹெச். ராஜாவின் புதிய தகவலால் தொடரும் சர்ச்சை - உண்மை என்ன?

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (15:13 IST)
மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியிடம், "நீங்கள் இந்தியரா?" என சென்னை விமான நிலையத்தில், பணியில் இருந்த பெண் காவலர் கேள்வி எழுப்பிய சம்பவம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் சமீபத்திய டிவிட்டர் தகவலால் மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது.

இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் இடைவெளிவிட்டு தொடர்ச்சியான இடுகைகளை ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

அவற்றில், "கனிமொழி அவர்களின் ட்வீட் ஒரு பொய் மொழி. ஏனெனில் திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது இந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி அவர்கள். எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு" என்று ஹெச். ராஜா கூறியுள்ளார்.

மேலும், கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்த மகிழ்ச்சியற்ற அனுபவம் அசாதாரணமானது அல்ல என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்கு ஹெச். ராஜா பதில் அளி்த்திருந்தார்.

அதில், "கடந்த 30 ஆண்டுகளில் அருணாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் நீங்கலாக எல்லா இடங்களுக்கும் பயணம் செய்துள்ளேன். ஆனால், அத்தகைய மகிழ்ச்சியற்ற அனுபவம் எனக்கு நேர்ந்ததில்லை திமுகவும் அதன் உறுப்பினர்களும் எதிர்வரும் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி மொழியை ஓர் பிரச்னையாக்க விரும்புகிறார்கள்" என்று ஹெச். ராஜா கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஹெச். ராஜா குறிப்பிட்டது போல, 1989-ஆவது ஆண்டில் சென்னையில் நடந்த கடற்கரை தேசிய முன்னணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய துணை பிரதமர் தேவி லாலின் உரையை தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு கனிமொழி பெயர்த்தாரா? என்ற தகவலின் உண்மைத்தன்மையை பிபிசி அறிய முயன்றது.

ஹெச். ராஜாவின் டிவிட்டரில் குறிப்பிட்டது போல, கருணாநிதிக்கு இந்தி மொழியாக்கம் செய்தீர்களா? என கனிமொழியிடம் பிபிசி கேட்டபோது, "அத்தகைய மொழிபெயர்ப்பு சம்பவமே நடக்கவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், " ஹெச். ராஜாவின் ஆதாரமற்ற டிவிட்டருக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது" என்றும் கனிமொழி தெரிவித்தார்.

வைரலாகும் புகைப்படங்கள்

இதனால், 1989-ஆம் ஆண்டில் கனிமொழி, அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு அருகே அமர்ந்தவாறு தேவிலாலின் உரையை மொழி பெயர்த்ததாக கூறப்படும் நிகழ்வாக சமூக வலைதளங்களில் உலா வரும் சில புகைப்படங்கள் குறித்த தகவலை பிபிசி ஆராய்ந்தது.

அந்த புகைப்படத்தின் அடிப்படையிலேயே ஹெ. ராஜா தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டதால் அதன் பின்னணியை அறிவது அவசியமானது.

அந்த படங்கள் அனைத்தும், தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமாரின் வீட்டில், அவரை திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழியுடன் சந்தித்தபோது எடுத்தவை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த படங்கள் எங்கு, எப்போது எடுக்கப்பட்டவை என்பதை அறிய, திரைப்பட நடிகர் சிவகுமாருடன் பிபிசி பேசியது.

அரசியல் கலப்பில்லாத வகையில் பேசுவதாக ஒப்புக் கொண்டு, அந்த படங்கள் எடுக்கப்பட்டதன் பின்னணியை சிவகுமார் விவரித்தார்.

நடிகர் சிவகுமார் விளக்கம்

"கலைஞர் கதை வசனம் எழுதிய பல படங்களில் ஒன்றான "பாடாத தேனீக்கள்" படத்தில் 1988-89 ஆண்டுகளில் நான் நடித்திருந்தேன். அப்போது அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அமைந்தது".

"ஒரு நாள் எனது ஓவியங்களை வீட்டில் வந்து பார்க்க கனிமொழி விரும்பினார். பிறகு அவற்றை பார்க்க எனது தந்தையும் வரலாமா? என கனிமொழி கேட்டார். அதன்படியே, அடுத்த இரு நாட்களில் தனது குடும்பத்தாருடன் கலைஞர் எனது வீட்டுக்கு வந்து எனது ஓவியங்களை பார்வையிட்டார்."

"அப்போது கலைஞர் "ஒரு நடிகனின் ஓவியம் என்றால் ஏதோ பூசணிக்காயோ பொம்மையோ போட்டிருப்பார் என நினைத்தேன். என்ன இப்படி அருமையாக படைப்புகளை தீட்டியிருக்கிறீர்களே" என்று கேட்டார்.

மேலும், "எதற்காக நடிக்க வந்தாய்?" என கலைஞர் கேட்டபோது, "உங்களைப் போன்ற முக்கிய பிரபலங்கள் பார்க்க வருவார்களே" என்று பதில் அளித்தேன்.

பிறகு, "அனைத்து ஓவியங்களை பார்க்க எவ்வளவு நேரம் ஆகலாம்" என கலைஞர் கேட்டபோது, இன்னும் ஒரு மணி நேரம் தேவைப்படும் என்று கூறினேன்.

அப்போதுதான் கலைஞர், "இன்னும் சில மணி நேரத்தில் வி.பி. சிங்கின் கூட்டம் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்கச் செல்கிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும் கனிமொழியும் ஓவியங்களை தீட்டுவதில் ஆர்வம் உடையவர் என்பதால் அவரிடம், "ஓவியங்களை இருந்து பார்த்து விட்டு வருகிறாயா?" என கலைஞர் கேட்டபோது, "இல்லை அப்பா, நானும் வருகிறேன்" என கூறினார்.

"இப்படித்தான் அனைறைய தினம் அவர்கள் எனது வீட்டுக்கு வந்து ஓவியங்களை பார்த்து விட்டு வி.பி. சிங் கூட்டத்துக்குச் சென்றார்கள்" என்று சிவகுமார் 1989-ஆவது ஆண்டில் நடந்த, அந்த குறிப்பிட்ட நாளின் ஒன்றரை மணி நேர நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

இதையடுத்து ஹெச். ராஜாவின் டிவிட்டர் தகவல் குறித்த அவரது கருத்தை பெற பிபிசி தொடர்ச்சியாக முயன்றது. ஆனால், இந்த செய்தி வெளியிடப்படும் நேரம்வரை தமது தரப்பு விளக்கத்தை ஹெச். ராஜா தெரிவிக்கவில்லை.

சர்ச்சை தொடங்கியது எப்படி?

இரு தினங்களுக்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரவல் தடுப்பு அறிவுரைகளை இந்தி மொழியில் வழங்கி வந்த மத்திய தொழிலக காவல் படை (சிஐஎஸ்எஃப்) காவலரிடம், அத்தகைய தகவலை ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் வெளியிடலாமே என கனிமொழி கேட்டதாகவும், அதற்கு அங்கு பணியில் இருந்த பெண் காவலர், நீங்கள் இந்தியர் தானா? என்றும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

அந்த சம்பவத்தை அடுத்து, இந்தி மொழி அறிந்திருப்பதுதான் இந்தியர் ஆக கருதப்படுவது எப்போது முதல் தொடங்கியது என்பதை அறிய விரும்புவதாக கனிமொழி தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட சிஐஎஸ்எஃப் தலைமையகம், கனிமொழிக்கு நேர்ந்த அனுபவத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதுடன், எந்த குறிப்பிட்ட மொழியையும் பயணிகளிடம் நிர்பந்திப்பது தங்களுடைய படையின் கொள்கை கிடையாது என்றும் தெளிவுபடுத்தியது.

இந்த நிலையில், கனிமொழிக்கு விமான நிலையத்தில் நேர்ந்த அனுபவத்துக்கு அதிருப்தி தெரிவித்து, தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்