டாக்காவில் ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்; ஒருவர் பலி

சனி, 24 அக்டோபர் 2015 (20:56 IST)
வங்கதேசத்தில் ஷியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். குறைந்தது 50 பேர் காயமடைந்தனர்.


 
அந்நாட்டுத் தலைநகர் டாக்காவில் வருடாந்திர அஷுரா நிகழ்வுக்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.
 
தங்களுடைய ஊர்வலம் இப்படி குறிவைக்கப்படுவது இதுவே முதல் முறையென வங்கதேச ஷியா முஸ்லிம்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். டாக்காவின் பழைய நகர் பகுதியில் விடிகாலை இரண்டு மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
அங்கிருக்கும் பிரதான ஷியா வழிபாட்டுத் தலமான ஹுசைன் தலானில் அஷுரா விழாவிற்கான ஊர்வலத்தைத் துவங்குவதற்காக ஷியா முஸ்லிம்கள் அங்கே கூடியிருந்தனர்.
 
சம்பவம் நடந்த இடத்திலேயே மூன்று பேரைக் காவல்துறை கைதுசெய்திருக்கிறது. ஆனால், அவர்களது அடையாளம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
 
"மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒரு குழப்பமான சூழலை உருவாக்குவதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம்" என அதிரடிப் படைப் பிரிவின் கர்னல் ஜியாவுல் அஹ்சான் தெரிவித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லையென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
அஷுரா நிகழ்வின்போது, ஷியா முஸ்லிம்கள் முகமது நபியின் பேரனான இமாம் ஹுசைனின் மறைவுக்காக வருந்துவார்கள். பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமையன்று ஜகோபாபாதில் இதே போன்ற அஷுரா விழாவின்போது நடந்த தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்