மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மேல்முறையீடுகள் வாபஸ்

புதன், 19 நவம்பர் 2014 (11:58 IST)
போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதி மன்றத்தால் குற்றங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 5 இந்திய மீனவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல் முறையீடுகள் வாபஸ் பெறப்பபட்டுள்ளதாக மீனவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 
இதனிடையே இவ்விவகாரம் தொடர்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை தமிழகத்தின் மீனவ பிரதிநிதிகள் செவ்வாயன்று சந்தித்து பேசினர்.
 
புது டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மத்திய துணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட ராமேஷ்வரம், பம்பன், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் மீனவ பிரதிநிதகள் கலந்துக் கொண்டனர்.
 
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன் பிரசாத் மற்றும் லேங்க்லெட் ஆகிய ஐந்து மீனவர்கள் போதைப் பொருள் கடத்தியதாக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.
 
கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அன்று கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த 5 மீனவர்களுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
 
இந்த தீர்ப்பினை எதிர்த்து அந்த ஐந்து இந்திய மீனவர்களின் சார்பில் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு முன்னதாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இதனிடையே இந்த ஐந்து மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்திகள் தொடர்பில் இரு அரசுகளும் இது வரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
 
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தன், இவ்விவகாரத்தில் தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவைப் பெற்றுத் தருவோம் என அரசாங்கம் உறுதியளித்ததாக கூறினார்.
 
மேன் முறையீட்டு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைதான் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்