மலையகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன.ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஆட்சியிலிருந்து, தற்போது சுயாதீனமாக செயற்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி சார்பில் இன்று மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் என பல எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. குறிப்பாக பதுளை மாவட்டம் ஹபுத்தலை நகரில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில், வெளிநாட்டவர்களும் கலந்துக்கொண்டு, அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய ஆட்சியாளர்களே காரணம் என கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அண்மையில் மலையகத்தில் பாரிய போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர், மலையகத்தில் சிறு சிறு போராட்;டங்கள் மற்றும் ஆர்பபாட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில், இன்று அரசாங்கத்தின் அங்கத்துவமாக செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்துள்ளது.இதன்படி, மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.நுவரெலியா, ஹட்டன், கொட்டகலை, யட்டியாந்தோட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
அரசாங்கத்தை வெளியேறுமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை வெளியேறுமாறு கோரி, மலையக மக்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.மலையகத்தில் இன்று போராட்டங்கள் காரணமாக, மலையகத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.இதேவேளை, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக, நாட்டின் பல்வேறு துறைகள் இன்றைய தினம் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.