ஜெயலலிதாவுக்காக நாரிமன் வாதாடியது தெளிவான விதிமீறல்: முன்னாள் நீதிபதி சந்துரு

வெள்ளி, 17 அக்டோபர் 2014 (23:10 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பாலி எஸ் நாரிமன் ஆஜராகி வாதாடினார். அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.
 
அதே சமயம், பாலி எஸ் நாரிமன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் ஆஜரானது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காரணம் இந்த சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட ஜெயலலிதாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளை எதிர்த்து ஜெயலலிதா முன்னர் வழக்கு தொடுத்தபோது, இதே நாரிமன், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாகவும், திமுக சார்பாகவும் ஜெயலலிதாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலும், இந்திய உச்சநீதிமன்றத்திலும் வாதாடியிருப்பதாக கூறும் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இப்படி கடந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர், அதே வழக்கு தொடர்பான இந்த முன் ஜாமீன் கோரும் வழக்கில் ஜெயலலிதாவின் சார்பில் வாதாடுவது வழக்கறிஞர்களுக்கான தார்மீக நெறிமுறைகளை மீறும் செயல் என்று சண்முகசுந்தரம் விமர்சித்திருந்தார்.
 
சண்முகசுந்தரம் முன்வைக்கும் விமர்சனம் சரியே என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே சந்துரு. இதில் நாரிமன் வெறும் தார்மீக நெறிமுறைகளை மட்டும் மீறவில்லை; மாறாக வழக்கறிஞர்களுக்கான இந்திய பார் கவுன்சிலின் நடத்தை விதிமுறைகளையும் தெளிவாக மீறியிருப்பதாக கூறும் நீதிபதி சந்துரு, இதற்காக நாரிமன் மீது டில்லி பார் கவுன்ஸிலும், இந்திய பார் கவுன்ஸிலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
 
அத்துடன், பாலி எஸ் நாரிமனின் மகன், இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சூழலில் நாரிமன் இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கறிஞராக பணிபுரிவதே தவறு என்கிறார் நீதிபதி சந்துரு. இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர்கள் யாரும் அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதிநீதிமன்றங்களில் பணிபுரியக் கூடாது என்று இதே இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தி, வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார் நீதிபதி சந்துரு.
 
இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களின் உறவினர்களில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கும் அந்தக் கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கூட அப்படியே பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதி சந்துரு, இது தொடர்பில் இந்திய பார் கவுன்ஸில் வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் ஒரு சிறு திருத்தம் செய்வது இதை மேலும் வலுப்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்