குழந்தைகளைக் கொன்ற சகோதரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இடைக்காலத் தடை

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (08:56 IST)
குழந்தைகளைக் கடத்தி, அப்படி கடத்தப்பட்ட குழந்தைகளில் குறைந்தது 5 பேரைக் கொன்றதாகக் குற்றம் காணப்பட்ட மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த சகோதரிகள் இரண்டு பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த ரேனுகா ஷிண்டே மற்றும் சீமா காவித் என்ற அந்த இரண்டு சகோதரிகளும் கடந்த 1994இலிருந்து 1996ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 13 குழந்தைகளைக் கடத்திப் பிச்சையெடுக்க வைத்ததாகவும், பிச்சையெடுக்க மறுக்கும் அல்லது திறமையில்லாத குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்றும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
 
ரயில் நிலையங்கள், கோயில்கள், கண்காட்சிகள் மற்றும் தோட்டங்கள் போன்ற இடங்களிலிருந்து இவர்கள் பிள்ளைகளைக் கடத்தி வந்தனர்.
 
இந்தியாவில் பொதுவாக பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. அதிலும் அரிதாகவே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
 
இந்த வழக்கில் கடந்த 2001ஆம் ஆண்டில் அந்த இரண்டு சகோதரிகளுக்கும் கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அதே தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2006ஆம் ஆண்டில் உறுதி செய்ததது. அப்போது, ‘இவர்கள் பெண்கள் என்ற ஒரே கரணத்தைத் தவிர, இவர்களின் தண்டனையை குறைக்க வேறு எந்தக் காரணமும் இல்லை’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 
தண்டனை வழங்கப்பட்டுள்ள இந்த இரண்டு சகோதரிகள், தங்களின் மரண தண்டனை நிறைவேற்ற, 13 ஆண்டுக் காலத் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, தங்களின் மரண தண்டனையைக் குறைக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று மேல்முறையீடு செய்துள்ளனர்.
 
இந்த மேல் முறையீட்டு மனுவை மும்பை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்தப் பெண்களின் வழக்கறிஞர் சுதீப் ஜெய்ஸ்வால் செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இந்த மனுக்கள் மீதான விசாரணை, 2014 செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று நடைபெறும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
அந்த இரண்டு சகோதரிகளின் சார்பில் இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள், குடியரசுத் தலைவரால் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டதாகச் செய்தி ஊடகங்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தன.
 
இந்த ஆண்டின் முற்பகுதியில் சந்தனமரக் கடத்தல் மற்றும் கொலைகளில் ஈடுபட்ட வீரப்பனின் கூட்டாளிகள், ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தோரின் மரண தண்டனையை நிறைவேற்ற நீண்ட கால தாமதம் ஏற்பட்டுவிட்டதைக் காரணம் காட்டிய இந்திய உச்சநீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையினை இரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்திருந்தது.
 
இந்நிலையில் இந்தச் சகோதரிகளின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படலாம் எனச் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்