இந்த 4 கனிமங்கள் உள்ள நாடுகளே எதிர்கால உலகில் ஆதிக்கம் செலுத்தும் - நிபுணர்கள் எச்சரிக்கை
சனி, 23 ஏப்ரல் 2022 (16:29 IST)
எண்ணெய் வளமும் இயற்கை வாயுவும் உலகம் முழுவதும் பல சர்ச்சைகளுக்கு காரணமாகி விட்டன. முன்னதாக, உலகப்போர் என ஒன்று வந்தால் அது எண்ணெய்க்காக இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த கனிமத்துக்காக அப்படி ஒரு நிலை வரலாம் என்று எச்சரித்துள்ளனர் நிபுணர்கள். என்ன கனிமம் அது? இதனால் எந்த நாட்டுக்கு என்ன பிரச்னை?
மார்ச் 8, அதிகாலை 5:42 மணிக்கு நிக்கலின் விலை மிக வேகமாக உயரத் தொடங்கியபோது, லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஒரு பெரும் பீதி ஏற்பட்டது.
காரணம், வெறும் 18 நிமிடங்களில் 'நிக்கல் விலை' டன்னுக்கு ஒரு லட்சம் டாலர்களை எட்டியது. இதனால் நிக்கல் தொடர்பான வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இந்த அளவை எட்டுவதற்கு முந்தைய 24 மணி நேரத்திலும் நிக்கல் விலை 250 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, சந்தையில் உலோக நெருக்கடி ஏற்படுவது இதுவே முதல் முறை.
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என நம்பப்படுகிறது. குறிப்பாக, 'நிக்கல்' போன்ற உலோகம் உலகில் முக்கியத்துவம் பெற்றுள்ளது இதிலிருந்து தெளிவாகிறது. மாசு கட்டுப்பாட்டுடன் கூடிய பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு இந்த கனிமம் முக்கியமானது.
தற்போதைய நிலையில், எரிவாயு மற்றும் எண்ணெய்க்கான முக்கிய விநியோக நாடாக ரஷ்யா உள்ளது. யுக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு படையெடுப்பின்போது எரிவாயு மற்றும் எண்ணெய்க்காக ரஷ்யாவை ஐரோப்பிய நாடுகள் நம்பியிருப்பது, எரிபொருளையும் ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பதைக் எடுத்துக்காட்டியது.
யுக்ரேன் மீதான தாக்குதலை நிறுத்துவதற்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்க வேண்டிய கட்டாயத்தில்தான் ஐரோப்பா உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மார்ச் 31 ஆம் தேதியன்று, "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சுத்தமான எரியாற்றல் நமது தேசிய நலனை பாதுகாக்க உதவும்," என்றார்.
மேலும், "எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விஷயங்களுக்காக சீனா மற்றும் பிற நாடுகளை சார்ந்திருப்பதை நாம் நிறுத்த வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
பேட்டரிகள் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் சேமிப்புக்காக பயன்படுத்தப்படும் கனிமங்களின் உள்ளூர் உற்பத்தி மற்றும் செயலாக்கத்தில் உதவுவதற்காக ஒரு பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை இயற்றுவதாக ஜோ பைடன் முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்த கனிமங்களில் லித்தியம், நிக்கல், கிராஃபைட், மாங்கனீஸ், கோபால்ட் ஆகியவை அடங்கும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்தது.
ரஷ்யாவின் எரியாற்றல் ஆயுதம் வேறு:
ஒவ்வொரு நாட்டிற்கும் அவற்றின் தேவைகளைப் பொறுத்து வெவ்வேறு தாதுக்கள் முக்கியமானவை. இதன் மூலம் எரியாற்றலில் மாற்றம் ஏற்படும் காலகட்டத்தில், சந்தையில் அந்த நாடு சிறப்பாக போட்டியிட முடியும்.
குறிப்பாக, எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் கனிம வளப் போட்டியில் பின்தங்கிவிடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உதாரணமாக, ரஷ்யாதான் உலகின் இரண்டாவது பெரிய எரிவாயு உற்பத்தியாளர் மற்றும் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர். ரஷ்யாவின் பொருளாதார சக்தி பெரும்பாலும் புதைபடிவ எரிபொருட்களை சார்ந்துள்ளது.
ரஷ்யாவில் சில தாதுக்கள் ஏராளமாக இருந்தாலும், இந்த முக்கியமான தாதுக்கள் மற்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகில் கோபால்ட்டின் மிகப்பெரிய பங்கு காங்கோ குடியரசில் இருந்தும் , நிக்கல் இந்தோனேசியாவில் இருந்தும், லித்தியம் ஆஸ்திரேலியாவில் இருந்தும், தாமிரம் சிலி நாட்டிலிருந்தும், அரிய கனிமங்கள் சீனாவில் இருந்தும் எடுக்கப்படுகின்றன.
உலகில் எரியாற்றல் மாற்றத்திற்கு குறைந்தது 17 தாதுக்கள் முக்கியமானவை. இந்த கனிமங்களை பிரித்தெடுத்து பதப்படுத்தும் திறன் கொண்ட நாடுகள், அதிக பலன் அடையப் போகின்றன.
இந்த 17 கனிமங்களில் மிக முக்கியமானவை லித்தியம், நிக்கல், கோபால்ட், தாமிரம், கிராஃபைட் மற்றும் ரேர் எர்த் என சர்வதேச எரிசக்தி முகமை மதிப்பிட்டுள்ளது.
எந்த நாடு முன்னணியில் உள்ளது?
2040 ஆம் ஆண்டளவில் இந்த கனிமங்களின் தேவை வேகமாக அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின் நிபுணர் தாய்- யுன்- கிம் கூறுகிறார்.
எந்த நாடுகள் ஆற்றல் மாற்றத்தால் அதிகம் பயனடையும் என்பதை அவர் இரு பகுதிகளாக பிரிக்கிறார். ஒன்று இந்த தாதுக்கள் மிகுதியாகக் காணப்படும் நாடு, இரண்டாவதாக அவற்றைச் செயலாக்குவதில் முன்னணியில் உள்ளவை.
மிகுதியான கனிம அளவு மற்றும் அவற்றை பிரித்தெடுத்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, பல நாடுகள் முன்னணியில் உள்ளன. ஆனால், கனிமங்களை பதப்படுத்துவதில் சீனாதான் ஆதிக்கம் செலுத்துகிறது.
"எரிசக்தி மாற்றத்தால் எந்த நாடு அதிகம் பயனடையும் என்று சொல்வது மிகவும் கடினம். அவை உற்பத்திச் சங்கிலியில் எங்கு உள்ளன என்பதைப் பொறுத்தே இது அமையும்,"என்று பிபிசி முண்டோ சேவையுடனான உரையாடலில், தாய்- யுன்- கிம் கூறினார்.
ஆனால், நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பது தெளிவாகிறது. 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் எண்ணெய் முக்கிய பங்கைக் கொண்டிருந்தாலும், ஆற்றல் மாற்றத்தில் உதவிடும் கனிமங்கள் 21 ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும்.
அதனால்தான், "இவை எதிர்காலத்தின் கனிமங்கள்" என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நான்கு மிக முக்கிய உலோகங்கள்
இந்த உலோகங்கள் மின்சார-பேட்டரிகளுக்கு அதிகம் தேவைப்பட்டாலும், தொழில்துறை நடவடிக்கைகளில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
"இந்த உலோகங்களின் விநியோகம், தேவைக்கு ஈடு கொடுக்கும் அளவில் இல்லையென்றால் அவற்றின் விலை விண்ணைத் தொடும்" என்கிறார் பொருளாதார ஆராய்ச்சிக்கான ஜெர்மன் கழகத்தின் ஆராய்ச்சியாளர் லூகாஸ் போயர்.
ஆண்ட்ரியா பெஸ்கடோரி மற்றும் மார்ட்டின் ஸ்டர்மர் ஆகியோருடன் இணைந்து லூகாஸ் போயரின் - "தி மெட்டல்ஸ் ஆஃப் தி எனர்ஜி ட்ரான்சிஷன்" ஆய்வுக்கட்டுரை, சென்ற ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான காரணி இந்த உலோகங்களை பிரித்தெடுக்கும் செயல்முறை என்று போயர் கூறுகிறார். இந்த உலோகங்களைப் பிரித்தெடுக்க தொடங்கப்படும் சுரங்கத் திட்டங்கள் முழுமையாக செயல்பட குறைந்தது ஒரு தசாப்தம் (10 ஆண்டுகள்) ஆகும். சராசரியாக 16 ஆண்டுகள் ஆகலாம். எனவே, வரும் நாட்களில் இந்த உலோகங்களுக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு.
ரேர் எர்த்துடன் கூடவே நான்கு மிக முக்கியமான உலோகங்கள் நிக்கல், கோபால்ட், லித்தியம் மற்றும் தாமிரம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.அவற்றின் விலை நீண்ட காலத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு உயரலாம். சர்வதேச சந்தையில் சில நாட்கள் விலை உயர்ந்து பின்னர் குறையும் சாதாரண உயர்வாக இது இருக்காது.
இந்த நான்கு உலோகங்களை உற்பத்தி செய்பவர்கள் மட்டுமே அடுத்த 20 ஆண்டுகளுக்கு எண்ணெய் துறைக்கு இணையான வருமானத்தை ஈட்ட முடியும்.
"இந்த உலோகங்கள் புதிய எண்ணெயாக இருக்கலாம். மேலும் கோபால்ட் உற்பத்தி செய்யும் காங்கோவில் முதலீடு செய்வதன் மூலம் சீனா மிகப்பெரிய வீரராக மாறியுள்ளது" என்று போயர் கூறுகிறார்.
மேற்கத்திய நாடுகளின் அச்சம்
தங்கள் ஆற்றல் சார்பை குறைக்க வேண்டிய சூழ்நிலையில் மேற்கத்திய நாடுகள் உள்ளநிலையில் , இந்த வளர்ந்து வரும் தேவையின் ஒரு பகுதியை வழங்கக்கூடிய நாடுகளும் உள்ளன.
இந்த மாற்றத்தில் இருந்து லாபம் ஈட்டுவதில் சீனா சிறந்த நிலையில் உள்ளது என்கிறார் ப்ளூம்பெர்க் என்இஎஃப் ஆராய்ச்சி மையத்தின் உலோகங்கள் மற்றும் சுரங்கத்துறை தலைவர் குவாசி எம்போஃபோ.
"ரஷ்யாவின் உலோக உற்பத்தியை சீனா தனது சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து மற்ற நாடுகளுக்கு விற்க முடிந்தால், இந்த மாற்றத்தின் வெற்றியாளராக அது ஆகமுடியும்," என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்த விஷயத்தில் மற்ற நாடுகளும் போட்டியில் உள்ளன. இந்தோனேஷியா கடந்த இரண்டு ஆண்டுகளாக நிக்கல் உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க வருங்காலத்தில் அது உற்பத்தியை மேலும் அதிகரிக்கக்கூடும்.
ரஷ்யா- யுக்ரேன் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட உலோகம் நிக்கல். ரஷ்யா அதன் உலகளாவிய உற்பத்தியில் ஒன்பது சதவிகிதத்தை உற்பத்தி செய்கிறது.
மறுபுறம், பிளாட்டினம் க்ரூப் உலோகங்களின் பற்றாக்குறை இருந்தால், தென்னாப்பிரிக்க உற்பத்தியாளர்கள் அந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும்.
எதிர்கால உலோகங்களைக் கட்டுப்படுத்தும் இந்தப் போட்டியில் இருக்கும் நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், மேற்கத்திய நாடுகள் வேகமாக முன்னேறாவிட்டால், அவை பின் தங்கும் அபாயம் ஏற்படக்கூடும்.