கொரோனா வைரஸ் ஊரடங்கு: உலகெங்கும் ஆளில்லா வீதிகளில் சுற்றித்திரியும் விலங்குகள்
வியாழன், 30 ஏப்ரல் 2020 (12:28 IST)
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், விலங்குகளுக்கு மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நகரில் வலம் வர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நகர் பகுதிகளில் உள்ள விலங்குகள் தெருக்களை உல்லாசமாக சுற்றி திரிவதைப்பார்த்து மனிதர்களும் மகிழ்கின்றனர். இது தவிர பூங்காக்கள் மற்றும் தேசிய விலங்குகள் சரணாலயத்தில் உள்ள விலங்குகளும், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மகிழ்ச்சியாக இருப்பதாக பூங்கா கண்காணிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
பொதுவாக டால்ஃபின்களை நம்மால் கடற்கரையில் நின்றபடி காண முடியாது. ஆனால் தற்போது டால்ஃபின்கள் கடற்கரையோரம் வந்து செல்கின்றன என்பது ஒரு நல்ல செய்தி தான். அவ்வாறு சில காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
காட்டு பன்றிகள் சில இஸ்ரேல் நகர விதிகளுக்கு வந்ததாக அந்நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஹாஃபியா என்ற நகரத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் பன்றிகள் உணவு தேடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அங்கு இது பிரச்சனையாகவும் மாறியுள்ளது, கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பிறகும் நகரவீதிகளில் பன்றிகள் வலம்வந்தால் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்நகர அதிகாரிகள் இப்போதே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பாவின் அல்பேனியாவில் ஃபிளமிங்கோ பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என அதிகாரிகள் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே இருந்த எண்ணிக்கையை விட 3000 ஃபிளமிங்கோ அதிகரித்துள்ளன என்று கூறப்படுகிறது.
மேலும் அல்பேனியாவில் உள்ள நீர்நிலைகளை மாசுப்படுத்தி வந்த ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள் தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதுவே ஃபிளமிங்கோக்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.
அல்பேனியாவின் திவ்ஜாகா தேசிய பூங்காவில், 85 ஜோடி பெலிகன்கள் கூடு கட்டி வருகின்றன. வழக்கமாக வருகை தரும் 50,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைப்பட்டுள்ளதால் இப்பொழுது பறவைகளின் இனப்பெருக்கம் ஆரோக்கியமான சூழலில் நடைபெறும் என்றும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றும் பூங்கா அதிகாரிகள் நம்புகின்றனர்.
தாய்லாந்தின், ஹட் சாவோ மாய் தேசிய பூங்காவில் மிகவும் அறியவகையான டுகோங் மீன்கள் நீந்துவதை அங்குள்ள கேமரா படம் பிடித்து காட்டியுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் இந்த அரியவகை மீன்களை காண முடிந்தது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிலியின் சாண்டியாகோ நகர வீதிகளில் சில சிங்கங்கள் அலைந்து திரிவதைக் காணமுடிகிறது.
பொது மக்கள் புகார் அளித்தவுடன் சிங்கங்கள் சிறைபிடிக்கப்பட்டு மீண்டும் வனபகுதிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன.
ஜெர்மனியின் நகர வீதிகளில் உள்ள புறாக்களுக்கு யாரும் உணவு அளிக்காததால், புறாக்கள் அதிக அளவு உயிரிழக்க நேரிடும் என அந்நாட்டு விலங்குகள் நல அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக புறாக்களுக்கு உணவு அளிக்கும் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் அங்குள்ள புறாக்கள் பசியில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புறாக்களுக்கு உணவு அளிக்க தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.