ஊக்க மருந்து பரிசோதனையில் சீனாவின் நட்சத்திர நீச்சல் வீரர் தோல்வி

செவ்வாய், 25 நவம்பர் 2014 (06:00 IST)
சீனாவின் முன்னணி நீச்சல் வீரர் ஊக்க மருந்து பயன்பாட்டுப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஒலிம்பிக் மற்றும் உலகப் பட்டங்களை வென்றுள்ள நீச்சல் வீரர் சன் யாங் தடைசெய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தினாரா என்று கண்டறியும் சோதனையில் தோல்வியடைந்துள்ளார் என சீனாவில் ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான அமைப்பு அறிவித்துள்ளது.
 
கடந்த மே மாதம் நடைபெற்ற பரிசோதனையில் தடை செய்யப்பட்ட ட்ரைமெட்டாஜிடைனை அவர் பயன்படுத்தியிருந்தது தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து அவருக்கு மூன்று மாதத் தடை விதிக்கப்பட்டு, அந்தத் தண்டனைக் காலமும் முடிவடைந்துள்ளது.
 
இதயத்தில் படபடப்பு அதிகரிக்கும் வேளையில், அதைக் கட்டுப்படுத்த அளிக்கப்படும் மருந்தில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்தது என்பது தனக்குத் தெரியாது என்று அவர் விளக்கமளித்திருந்தார்.
 
கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் நீச்சல் விளையாட்டில் அவர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.
 
ஆடவருக்கான 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் அவர் உலகச் சாதனையும் படைத்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்