"தமிழகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் பட்டியல் தயார்" - கைது நடவடிக்கை தொடங்கும்

செவ்வாய், 3 டிசம்பர் 2019 (11:50 IST)
உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் முதலிடமும், தமிழகத்தில் சென்னை முதலிடமும் வகிப்பதாகவும் தகவல் ஒன்று ஊடகங்களில் பரவி வருகிறது.
"அமெரிக்க புலனாய்வுத் துறை இந்திய உள்துறைக்கு அனுப்பிய தகவலின் மூலம், உலகிலேயே குழந்தைகள் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகளவில் உள்ள நகரம் சென்னை என்று தெரியவந்துள்ளது" என்று அந்த ஊடக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், இந்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அறிவதற்கும், மேலதிக தகவல்களை பெறுவதற்கும் தமிழக காவல்துறையின் கூடுதல் காவல்துறை இயக்குனர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) மு. ரவியை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது.


 
"சென்னை இடம்பெற்றிருப்பது வருத்தத்திற்குரியது"
குழந்தை ஆபாசப்படம் பார்ப்பவர்கள் பட்டியலில் உலகிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்டபோது, "இந்த தகவலுக்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. எனினும், இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து ஒரு அறிக்கை மத்திய உள்துறைக்கு வந்தது என்பது உண்மைதான். அதை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் குழந்தை ஆபாசப்படம் பார்ப்பவர்களின் பட்டியல் மத்திய உள்துறையிடமிருந்து எங்களுக்கு கிடைத்துள்ளது" என்று அவர் கூறினார்.
 
"மொழி, பண்பாடு உள்ளிட்டவற்றில் பற்றுமிக்க தமிழர்கள் இதுபோன்ற ஒரு பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். எனினும், அடுத்த ஆண்டிற்குள் இப்படிப்பட்ட ஒரு பட்டியலில் தமிழகம் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்."
 
"ஆபாசப்படம் பார்ப்போர் பட்டியல் தயார்"
தமிழகத்தில் குழந்தை ஆபாசப் படங்களை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக காவல்துறைக்கு அனுப்பியுள்ளதாக கூறுகிறார் ரவி.
 
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் எளிய தொழில்நுட்பங்கள்
ஆபாசமான விளம்பரம் வர காரணம் நீங்களா? சரிசெய்வது எப்படி?
"குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்த்தவர்கள், தரவிறக்கம் செய்தவர்கள் போன்றவர்களின் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் இணைய முகவரிகளை (ஐ.பி அட்ரஸ்) மத்திய உள்துறை அமைச்சகம் எங்களுக்கு அனுப்பியுள்ளது.
 
அந்த இணைய முகவரிக்கு சொந்தமான நபர்களின் முழுத் தகவல்களையும் அறியும் வகையில், அந்த தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளோம். வெகுவிரைவில் முழுத்தகவலும் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் பணி தொடங்கும்" என்று கூறுகிறார் ரவி.
 
"இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு கைது செய்யப்படுபவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று முதல் ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யப்படும்."
 
'காவலன் செயலியை பயன்படுத்துங்கள்'
தெலங்கானா, தமிழ்நாடு, ஜார்கண்ட் என பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெண்கள், சில இடங்களில் சிறுமிகள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும், மோசமான முறையில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் பற்றிய செய்திகள் வந்துள்ளன.
 
இந்நிலையில், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு தமிழக காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அவரிடம் கேட்டபோது, "இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மகளிர் காவல் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
 
அது மட்டுமின்றி, இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் மூலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறன. மேலும், தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள 'காவலன்' என்ற செயலியை திறன்பேசியில் பதிந்து வைத்திருந்தால் ஆபத்தான நிலையில் உள்ளதாக நினைக்கும் பெண்கள், திறன்பேசியை மூன்று முறை அசைத்தாலே அவர்களுக்கு உடனடியாக காவல்துறை உதவி செய்வதற்கும் தொழில்நுட்பத்தின் மூலம் வழிகை செய்யப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமின்றி, 'பிங்க் பேட்ரோல்' எனும் திட்டத்தின் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு முற்றிலும் பெண் காவலாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடும் திட்டம் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது."
 
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, அப்படிப்பட்ட சமயத்தில் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரவி, "ஒரு பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்த முனைபவர் மனதில், ஆக்ரோஷம், பயம் உள்ளிட்ட இரண்டு விதமான எண்ணங்கள் இருக்கும்.
 
எனவே, தாக்குதலுக்கு உள்ளாகிறவர், தற்காப்பில் ஈடுபடுவதுடன், அக்கம்பக்கத்தில் யாராவது இருக்கும் பட்சத்தில், உதவி கோரி கூச்சலிடுவது உள்ளிட்ட வழிகளின் மூலம் அந்த நபருக்கு இருக்கும் பய உணர்வை அதிகரிக்க முயற்சிக்கலாம்" என்று அவர் ஆலோசனை கூறுகிறார்.
 
இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாசப்பட இணையதளங்களை மத்திய அரசின் உத்தரவின்படி, நாட்டிலுள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஏற்கனவே முடக்கியுள்ளன. இருப்பினும், அதையும் மீறி, வர்ச்சுவல் பிரைவேட் நெட்ஒர்க் (விபிஎன்) உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி, பலர் தங்களது உண்மையான இணைய முகவரியையே கண்டுபிடிக்க முடியாத வகையில், இணையத்தை எண்ணம்போல் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
 
எனவே, தற்போதைய சூழ்நிலையில், சட்டத்தை விட தனிமனிதரின் கட்டுப்பாடும், ஒழுக்கமுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதே நிதர்சனம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்