சமஸ்கிருத வாரம் அனுசரிக்க சிபிஎஸ்இ பள்ளிகளுக்குப் பரிந்துரை

வியாழன், 17 ஜூலை 2014 (12:28 IST)
இந்தியாவில் சமஸ்கிருத மொழி தொடர்பான விழிப்புணர்வை, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் ஒரு சுற்றறிக்கையை 'சி பி எஸ் இ' (CBSE) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

 
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால், இந்த வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சமீபத்திய சுற்றறிக்கையில், இந்த ஆண்டு சமஸ்கிருத மொழி வாரத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாயாக விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் அந்த மொழியை கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சமஸ்கிருத மொழியை பிரபலப்படுத்தும் இந்த முயற்சியில், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பங்கேற்கும்படி கோரப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் சமஸ்கிருத மொழி பற்றிய தங்களது அறிவை பகிர்ந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும் என்றும் கூறியுள்ளது. மாணவர்கள் மத்தியில் மொழியியல் படைப்பாற்றல் வளர்ப்பதற்கு இப்படியான சமஸ்கிருத வார கொண்டாட்டங்கள் உதவும் என்றும், அதனால் நெறிமுறைப்படுத்தப்பட்ட கல்வி தரத்தை உயர்த்த அது வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜூலை மாதத்தில் இது தொடர்பான நிகழ்ச்சிகளின் முன்னோட்டங்களை அனைத்து பள்ளிகளும் அரங்கேற்றி பின்னர் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதிக்கு முன்னதாக தேசிய அளவில் பங்கேற்பதற்கான உள்ளீடுகளை அளிக்கவும் கோரியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சமசுகிருத வாரம் தொடர்பான பல்வேறு கொண்டாட்ட நிகழ்சிகளை நடத்திடவும் இந்த சுற்றறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
 
இதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என்று தனித்தனியே தேசிய அளவிலான பல போட்டிகளையும் அறிவித்துள்ள அந்த அறிக்கையில், சமசுகிருதம் மொழிக்கான பிரத்யேக ஆய்வரங்கங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சங்கராச்சாரியார் போன்ற சமஸ்கிருத மொழித் திரைப்படங்களையும் மாணவர்களுக்கு பள்ளிகளில் திரையிடலாம் என்றும் இந்த சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
"ஆங்கிலமே அவசியத் தேவை; சமஸ்கிரதமல்ல"
 
அதே சமயம், அரசு உதவியுடன் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்குத் தேவைப்படுவது ஆங்கில மொழிப் புலமையை அதிகப்படுத்துவதற்கான உதவிகள் தானே தவிர சமஸ்கிரத வார கொண்டாட்டங்களல்ல என்கிறார் டில்லியில் இருக்கும் சிபிஎஸ்ஸி பள்ளிகளில் ஒன்றான தமிழ்க் கல்விக் கழக மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் வி மைதிலி
 
சமஸ்கிரத வாரம் கொண்டாடும்படி வந்திருக்கும் இந்தச் சுற்றறிக்கை, தேவையற்ற ஒன்று என்கிறார் வி மைதிலி.
 
தங்கள் பள்ளியைப் போல அரசு உதவியில் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அவசியமான தேவை என்பது ஆங்கில மொழிப் புலமையை அதிகரிப்பதற்கான உதவிகள் தானே தவிர சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்கான விளம்பர அறிவிப்பல்ல என்கிறார் அவர்.
 
தனியாரால் நடத்தப்படும் சி பி எஸ் இ பள்ளிகளில் கிடைக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் வசதிகள் தம்மைப் போன்ற அரசு உதவியில் நடக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை என்று கூறும் மைதிலி, அரசின் கவனமும் உதவியும் ஆங்கில மொழிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் செலுத்தப்பட்டால் மாணவ மாணவிகள் பயனடைவார்கள் என்கிறார் அவர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்