ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்குப் பதவி: மனு தள்ளுபடி

புதன், 8 அக்டோபர் 2014 (17:45 IST)
நீதிபதிகள் பதவி ஓய்வு பெற்ற பின் ஒரு குறிப்பட்ட காலம் வரை புதிய பதவிகளை ஏற்கத் தடை விதிக்கும் வழிமுறைகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையில், இந்த மனு விசாரணைக்கு இன்று ஏற்க மறுக்கப்பட்டது.
 
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அலி பெங்களூர் என்பவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவில், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனத்தையும் ரத்து செய்யக் கோரப்படிருந்தது.
 
மனுதாரர் தரப்பில் இந்த வழக்கில் இன்று வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் ஆஜராகி வாதாடிய போது, சமீப காலங்களில் ஓய்வு பெற்ற 21 நீதிபதிகளில் 15 பேர் அளவுக்குப் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
 
மேலும் இது போன்ற பதவி நியமனங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு உடனடியாக வழங்கப்படுவதால் அது மக்கள் மத்தியில் சந்தேகத்தை விளைவிப்பதாகவும் கூறினார்.
 
குறிப்பிட்ட சில அரசியல் ரீதியான நியமனங்கள் வழங்கப்படும் சமயங்களில், இது பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளாகுவதாகவும், இதனால் நீதித் துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வாதிட்டார்.
 
இவற்றை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. அத்தோடு கேரளா மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நியமிக்கப்பட்டதற்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்