பவானி சிங் நியமனம் முறைகேடுதான், எனினும் மறுவிசாரணை தேவையில்லை - உச்ச நீதிமன்றம்

புதன், 22 ஏப்ரல் 2015 (16:02 IST)
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது முறைகேடான விவகாரம்தான் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், எனினும் மறுவிசாரணை நடத்த தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
 

 
அதே சமயம் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 27ஆம் தேதி திங்களன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இத்தகைய சூழலில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பு, வரும் மே மாதம் 12 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
வழக்கறிஞர் பவானி சிங்கை தமிழக அரசு நியமனம் செய்தது தவறு என்றும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராகியது சட்டவிரோதமானது என்றும் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், ஃப்ரபுல்லாஹ் சி.பண்ட் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக இன்றும் நடைபெற்றது.
 
முன்னதாக நேற்று செவ்வாயன்று தொடங்கிய விசாரணையின்போது, அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் அந்தியர்ஜுனா ஆஜராகி வாதாடினார். அப்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகியது சட்டவிரோதமானது என்றார் அந்தியர்ஜுனா.
 
மேலும் ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான், வழக்கறிஞர் பவானி சிங் பல சந்தர்ப்பங்களிலும் எடுத்துள்ளதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
 
இவரைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமன், சட்டப்படிதான் பவானி சிங் நியமனம் நடைபெற்றுள்ளது என்றார். அதிலும் இது தொடர்பிலான விவகாரங்களில், உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதல்களை ஏற்று தான் பவானி சிங் ஆஜராகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து இன்றும் அவரது வாதம் நடைபெற்று முடிந்த பிறகு தான் தீர்ப்பு தேதியிடப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது.
 
ஏற்கனவே இந்த மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக நடைபெற்றது.
 
அப்போது இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வெளியிடுவதில், இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தார்கள்.
 
இந்த காரணத்தால் இது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்