கமலா ஹாரிஸ் வெற்றிக்கு பின்னால்: அன்பு அம்மா முதல் காதல் கணவர் வரை
திங்கள், 9 நவம்பர் 2020 (08:51 IST)
தமிழகத்தைத் தாய்வழிப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், தற்போது அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கிறார்.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் ஜனநாயகக் கட்சியின் உள்கட்சிப் போட்டியில் களமிறங்கிய பிறகுதான், உலக அளவில் இவர் மீது அதிக ஊடக வெளிச்சம் பாயத் தொடங்கியது.
அந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும், இப்போது ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றி மூலம் அமெரிக்காவின் துணை அதிபர் ஆகிறார் கமலா.
தான் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆக்கப்படுவார் என்று பைடன் அறிவித்தபோது, கமலா மீது இவ்வளவு கவனம் விழக் காரணம் அமெரிக்க துணை அதிபர் பதவியில் இதுவரை ஒரு பெண்ணோ, ஆப்ரிக்க-அமெரிக்க வம்சாவளியினரோ, ஆசிய-அமெரிக்க வம்சாவளியினரோ இருந்ததில்லை.
அந்த வரலாற்றை மாற்றப் போகும் கமலா ஹாரிஸ் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில தகவல்களைப் பாப்போம்.
"குடும்பம்தான் எல்லாம்"
"எனக்கும் குடும்பம்தான் எல்லாம். அமெரிக்கா, என் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் மற்றும் எங்கள் அருமையான குழந்தைகள் கோல் மற்றும் எல்லா எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வரை என்னால் காத்திருக்க முடியாது," என கடந்த 12 ஆகஸ்ட் அன்று, தன் ஆதரவாளர்கள் முன் வெளிப்படையாகச் சொன்னார்.
என் வேலை நிமித்தமாக எனக்கு பல பட்டங்கள் கிடைத்து இருக்கின்றன. அதில் அமெரிக்க துணை அதிபர் என்கிற பட்டம் பெருமிதமான ஒன்றுதான். ஆனால் மொமலா (Momala) என்கிற பட்டம் எனக்கு எப்போதும் நெருக்கமான ஒன்று என கமலா ஹாரிஸே சொல்லி இருக்கிறார்.
அம்மா ஷியாமளா
அமெரிக்க துணை அதிபராகத் தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிஸ், கடந்த 10 மே, 2020 அன்று, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் தாய் ஷியாமளாவின் படம் ஒன்றைப் பதிவு செய்து இருந்தார்.
அந்தப் பதிவில் "எல்லா விதமான தடைகளையும் உடைத்து எறிந்த ஒரு தாயின் மகள் நான். ஷியாமளா ஹாரிஸ் ஐந்து அடி உயரத்துக்கு மேல் இருக்கமாட்டார். ஆனால் எப்போதாவது அவரை சந்தித்து இருந்தால், அவர் ஏழு அடி உயரமானவர் என நீங்கள் நினைத்து இருப்பீர்கள். அவருக்கு அப்படி ஓர் உற்சாகமும், விடாமுயற்சியும் இருந்தது. அவர் என்னை வளர்த்ததற்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன்" என அன்னையர் தின வாழ்த்து சொல்லி இருந்தார் கமலா ஹாரிஸ்.
1960-ம் ஆண்டு உட்சுரப்பியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெறுவதற்கான கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு வந்தார் ஷியாமளா. அங்குதான் டொனால்டு ஹாரிஸை சந்தித்தார். அதன் பிறகு திருமணமும் செய்து கொண்டார்
1971-ம் ஆண்டில், கமலா ஹாரிஸ்-க்கு ஏழு வயதாக இருக்கும் போது, டொனால்டு ஹாரிஸ் மற்றும் ஷியாமளா, விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.
விவாகரத்துக்குப் பிறகும், இவர்களது வாழ்கையில் டொனால்டு ஹாரிஸ் தொடர்ந்து இருந்தார். இருப்பினும், தங்களின் வாழ்கையை வடிவமைத்ததில், பெரும் பகுதி, தன் தாய் ஷியாமளாவைத்தான் சேரும் எனச் சொல்லி இருக்கிறார் கமலா ஹாரிஸ்.
காதல் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப்
கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எமோஃப், தெற்கு கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தில், கோட் சட்டப் புலத்தில் சட்டம் பயின்றவர். 1990-களின் கடைசி காலம் வரை, பல்வேறு சட்ட நிறுவனங்களில் பணியாற்றினார். 2000-ம் ஆண்டில் சொந்தமாக சட்ட நிறுவனத்தை தொடங்கினார். 2006-ம் ஆண்டு, இந்த நிறுவனத்தை வெனபிள் என்கிற நிறுவனம் வாங்கி தம்முடன் இணைத்துக்கொண்டது
ஹாலிவுட் வீடியோ என்கிற நிறுவனத்துக்கும், ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான கணக்கு வழக்கு பிரச்சனையில், ஹாலிவுட் வீடியோ சார்பாக வாதாடினார். இதனால் பொழுதுபோக்கு தொடர்பான சட்ட விவகாரங்களில் இவருக்கென ஒரு பெயர் கிடைத்தது. இந்த வழக்குக்குப் பின், பல தயாரிப்பு நிறுவனங்கள் சார்பாக க்ளாஸ் ஆக்ஷன் எனப்படும் வழக்குகளில் ஆஜரானார் எம்ஹாஃப்.
2017-ம் ஆண்டு வெனபிள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். டி.எல்.ஏ ஃபைபர் என்கிற நிறுவனத்தில் கூட்டாளியாக சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். பொழுதுபோக்கு சார்ந்த வழக்குகள் மற்றும் அறிவுசார் சொத்து விவகாரங்களில் நிபுணர்.
இந்து, யூத மத வழக்கம்: கமலா - டக்ளஸ் திருமணம்
2013-ம் ஆண்டு, க்ரிசெட்டி ஹட்லின் என்பவர் ஏற்பாடு செய்த Blind Date-ல் தான் கமலா ஹாரிஸ் மற்றும் டக்ளஸ் எம்ஹாஃப் சந்தித்தார்கள் என்கிறது ஹாலிவுட் ரிப்போர்டர்.
ஒரு வருடம் கழித்து, ஒரு சிறிய நிகழ்ச்சியில், மனதுக்கு நெருக்கமான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தின் போது, இருவரும், தங்களின் கலாசாரங்களை மதிக்க முடிவு செய்து இருந்தார்கள்.
கமா ஹாரிஸின் இந்து கலாசாரத்தை ஏற்கும் விதத்தில் டாக் எம்ஹாஃப் பூமாலையை அணிந்து இருந்தார். டக்ளஸ் எம்ஹாஃப்-ன் யூத கலாசாரத்தை மதிக்கும் விதத்தில், கமலா ஹாரிஸ் கண்ணாடியை உடைத்தார் என்கிறது எஸ் எஃப் கேட் செய்தி வலைதளம்.
என் மனைவியின் அரசியல் வேலைகள், என்னை மிகவும் கவர்கிறது. என் மனைவியின் தேர்தல் வேலைகளின் போது, என்னை நிறுத்தி, என்னோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என கடந்த ஆண்டு, ஹாலிவுட் ரிப்போர்டருக்குச் சொல்லி இருந்தார் டக்ளஸ் எம்ஹாஃப்.
மொமலா (Momala) - நெருக்கமான பட்டம்
டாக் எம்ஹாஃப்-க்கு, முதல் திருமணத்தின் வழியாக, இரண்டு குழந்தைகள். அந்த குழந்தைகள் பெயர் தான் கோல் மற்றும் எல்லா. இந்த குழந்தைகள், கமலா ஹாரிஸை அன்பாக மொமலா என்று அழைக்கிறார்களாம். இந்த பட்டம்தான் தனக்கு நெருக்கமான பட்டம் என கமலா ஹாரிஸே சொல்லி இருக்கிறார்.
கமலா ஹாரிஸ் எலே (Elle) என்கிற பத்திரிகையில் "கோல் மற்றும் எல்லா, என்னை இதை விட சிறப்பாக வரவேற்க முடியாது. அவர்கள் அறிவான, திறமையான, நகைச்சுவை உணர்வு மிக்க குழந்தைகள். தற்போது குறிப்பிடத் தகுந்த விதத்தில் பதின் பருவ இளைஞர்களாக வளர்ந்து இருக்கிறார்கள். நான் ஏற்கனவே டக்ளஸால் கவரப்பட்டுவிட்டேன். ஆனால், எல்லாவும் கோலும்தான் என்னை இந்த குடும்பத்துக்குள் இழுத்து வந்து இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்" என எழுதி இருக்கிறார்.
அம்மா ஷியாமளா, கணவர் டாக் எம்ஹாஃப், உலகு போற்றும் கமலாவை மொமலா என்று அழைக்கும் எல்லா மற்றும் கோல் என அமெரிக்க துணை அதிபராகவுள்ள கமலாவின் அன்பு வளையம் அத்தனை அழகாக இருக்கிறது.