ஐரோப்பாவில் அழியும் நிலையில் ஒதிய மரங்கள் இருப்பதாக உயிரினங்களைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூஞ்சைக் காளான் தாக்கியும் வண்டுகள் தாக்குவதாலும் இந்த மரங்கள் அழந்துவருவதாகத் தெரியவந்துள்ளது.
ஜர்னல் ஆஃப் ஈகாலஜி இதழில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் ஆய்வு முடிவு ஒன்றின்படி, பிரிட்டனின் கிராமப்புறங்கள் முன்பைப் போல இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் ஒதிய மரங்கள் பெரும்பாலும் "இல்லாமல் போய்விடும்" என்று கூறப்பட்டுள்ளது. 1980களில் டச் எல்ம் என்ற நோயின் காரணமாக எல்ம் மரங்கள் அழிந்ததைப் போலவே தற்போதும் நடப்பதாக கூறப்படுகிறது.
பிரிட்டனின் வனப்பரப்பில் ஒதிய மரங்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. இந்த மரங்கள் நகர்ப்புறங்களில்கூட எளிதில் பார்க்கக் கிடைப்பவையாகும். நகரங்களில் மட்டும் 22 லட்சம் ஒதிய மரங்கள் காணப்படுகின்றன.
சலாரா என்ற இந்த பூஞ்சைத் தாக்குதல் 1992ல் கிழக்கு ஐரோப்பாவில் முதன் முதலில் காணப்பட்டது. தற்போது ஸ்காண்டிநேவியாவிலிருந்து இத்தாலிவரை 2 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பகுதிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இங்கிலாந்தில் 2012ல் இறக்குமதி செய்யப்பட்ட மரங்களை இந்த நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. பிறகு நார்ஃபோக், சஃபோக், சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு இந்த நோய் பரவியது.
இந்த நோய் தாக்கினால் முதலில் இலைகள் உதிரும். பிறகு கிளைகள் பாதிக்கப்படும். பிறகு முழு மரமுமே பயனற்றுப் போய்விடும்.
எமரால்ட் ஆஷ் போரர் எனப்படும் வண்டினம் ஆசியாவைச் சேர்ந்தது. தற்போது ஐக்கிய ராஜ்ஜியத்தில் இந்த வண்டினம் இல்லை.
ஆனால், மாஸ்கோவிலிருந்து ஒரு வருடத்திற்கு 25 மலை என்ற வேகத்தில் இது பரவி வருகிறது. தற்போது இந்த வண்டுகள் ஸ்வீடனை அடைந்திருக்கும் என நம்பப்படுகிறது.
இதில் ஆண் வண்டுகள் ஒதிய மரங்களை உணவுக்குப் பயன்படுத்துகின்றன என்பதால், குறைவான சேதத்தையே ஏற்படுத்தும். ஆனால், இந்த வண்டின் புழுக்கள் மரங்களைத் துளைத்து அதற்கு அழிவை ஏற்படுத்துகின்றன.