ஆந்திராவில் கொல்லப்பட்டவர்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் இழப்பீடு: தமிழக அரசு

புதன், 8 ஏப்ரல் 2015 (20:35 IST)
திருப்பதி வனப்பகுதியில் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு புதனன்று அறிவித்துள்ளது.
 

 
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள் அனைவரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர்கள் குழு திருப்பதி சென்று, இறந்தவர்களின் உடல்களை திரும்பப் பெற்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
தமிழக சுகாதாரத் துறையின் அமரர் ஊர்திகள் இதற்கென திருப்பதி எடுத்துச் செல்லப்படும் என்றும் இறந்தவர்களின் உறவினர்களும் திருப்பதி அழைத்துச்செல்லப்படுவார்கள் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
திருப்பதி காவல்துறையுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வதற்காக டிஜிபி மஞ்சுநாதா தலைமையில் காவல்துறை குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்