அமெரிக்கா: ஃபேர்குஸன் நகரில் ஊரடங்கு உத்தரவை மீறிப் போராட்டம்

திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (11:36 IST)
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரின் புறநகர்ப் பகுதியொன்றில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோரை காவல்துறையினர் கண்ணீர்ப் புகையும் புகைக் குண்டுகளும் வீசிக் கலைத்துள்ளனர்.

கறுப்பின இளைஞர் ஒருவரை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடுத்து, ஒருவாரத்துக்கும் மேலாக நடந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

கலைந்துசெல்ல மறுத்த 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டினால் மோசமாகக் காயமடைந்துள்ள நபர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

18 வயதான மைக்கல் பிரவுனை சுட்டுக் கொன்ற அதிகாரியின் பெயரை காவல்துறை கடந்த வெள்ளியன்று வெளியிட்டது.

இதனையடுத்தே பிரதேசத்தில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது.

மைக்கல் பிரவுன் சுடப்பட முன்னதாக, கடையொன்றை கொள்ளையிடுவதாகக் காட்டும் சிசிடிவி வீடியோ காட்சி ஒன்றையும் காவல்துறை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்