ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் - பெற்றோர் கவலையில் இருப்பது ஏன்?

வெள்ளி, 26 மே 2023 (10:25 IST)
ராஞ்சியில் உள்ள RIMS மருத்துவமனையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
 
ஜார்க்கண்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் (RIMS) திங்கள்கிழமை மதியம் ஒரு பெண் ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
 
இந்த குழந்தைகளின் தாய் அங்கிதா குமாரியும், தந்தை பிரகாஷ் குமார் சாவும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஏனெனில் திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் இந்த மகிழ்ச்சி, அவர்களுக்கு பல கவலைகளையும் கொண்டுவந்துள்ளது.
 
தற்போது குழந்தைகள் மற்றும் தாயின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் அடுத்த சில வாரங்களை மருத்துவமனையில் கழிக்க வேண்டும்.
 
சிசுக்கள், இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளன.
 
அங்கிதா குமாரி கடந்த மே 7-ம் தேதி முதல் RIMS-ல் உள்ள மகளிர் மற்றும் மகப்பேறு துறையில், பேராசிரியர் டாக்டர் சஷிபாலா சிங்கின் மேற்பார்வையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் அவர் இருந்தார். மே 22ஆம் தேதி மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அரை மணி நேரத்தில் ஒவ்வொன்றாக ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
 
முதன்முறையாக RIMSல் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் சஷிபாலா சிங் குழுவில் உள்ள டாக்டர் புலுப்ரியா தெரிவித்தார். இதற்கு முன் இங்கு ஒரு பெண் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
"இதுபோன்ற சம்பவங்கள் எப்போதாவது நடக்கும். ஆனால் நாட்டிலும் உலகிலும் இதுபோன்ற பிரசவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இது ஒரு சாதாரண செயல்முறை. சிலநேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் கருப்பையில் உருவாகின்றன. இதனால் தனியாக எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் கருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், முன்கூட்டிய பிரசவம் மற்றும் குழந்தைகளின் எடை குறைவாக இருப்பது போன்றவை ஏற்படலாம்,” என்று டாக்டர் புலுப்ரியா பிபிசியிடம் கூறினார்.
 
"அங்கிதாவின் விஷயத்திலும் இதேதான் நடந்தது. ஏழாவது மாதத்தில் அவருக்கு பிரசவம் செய்ய வேண்டியதாயிற்று. இதனால் அவரது குழந்தைகளின் எடை இயல்பைக்காட்டிலும் குறைவாக இருக்கிறது. அவற்றின் நுரையீரல் பலவீனமாக இருக்கிறது. அதனால் குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.
 
செயற்கை கருத்தரிப்பு
 
 
"ஐவிஎஃப் என்பது இயற்கையான வழியில் பெற்றோராக முடியாதவர்களுக்கு ஒரு வரம்" என்று அவர் கூறினார்.
 
"ஏழு வருடங்களாக அங்கிதாவால் தாயாக முடியவில்லை. அதனால் ஹசாரிபாக்கில் உள்ள மருத்துவமனையில் ஐவிஎஃப் செய்துகொண்டார். பல மாதங்கள் அதே மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். அங்கு செய்த சோதனையில் அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் RIMSக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.”
 
"கர்ப்பத்தின் 28வது வாரத்தில் அவர் எங்களிடம் வந்தார். அவருக்கு முழு கர்ப்பகாலத்திற்கு பிறகு பிரசவம் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் அவருக்கு முன்கூட்டியே பிரசவம் நடந்தது. நல்ல விஷயம் என்னவென்றால் சாதாரண பிரசவத்தின் மூலம் அவர் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை."
 
"எங்கள் சீனியர் டாக்டர் நீலம் மற்றும் அவரது குழுவினர் அங்கிதாவுக்கு பிரசவம் பார்த்தார்கள். இதன் போது, அங்கிதாவின் உடல்நிலை இயல்பாகவே இருந்தது. இந்த நிலை தொடர்ந்தால், சில வாரங்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இருப்பினும் குழந்தைகள் இன்னும் சில வாரங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும்."
 
அங்கிதா மற்றும் பிரகாஷ்
 
ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் உள்ள மலக்பூர் கிராமத்தில் வசிப்பவர் 27 வயதான அங்கிதா. இது இட்கோரி தொகுதியின் ஒரு பகுதியாகும். இவரது கணவர் பிரகாஷ் சாவ் பழ வண்டி மூலம் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அவர் முன்பு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். வேலை போனதும் பழங்கள் விற்க ஆரம்பித்தார். அவர் தனது உடன்பிறப்புகளில் மூத்தவர்.
"எனக்கு ஒரே நேரத்தில் ஐந்து பெண் குழந்தைகள் பிறப்பார்கள் என்று நான் நினைத்ததே இல்லை. திருமணமாகி இத்தனை ஆண்டுகளுக்குபிறகு குழந்தை பிறந்தது. அதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஆனால் இப்போது இந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் கவலையும் உள்ளது. RIMSல் NICU படுக்கை காலியாக இல்லாததால் என் இரண்டு மகள்களையும் ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. மீதமுள்ள மூன்று மகள்களும் RIMSல் உள்ளனர்." என்று பிரகாஷ் சாவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"16 நாட்களுக்கு முன்பே என் மனைவி இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நிலையில் என் குழந்தைகளுக்கு ரிம்ஸ் மருத்துவமனையில் ஏன் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது என் கேள்வி. என் மனைவி ஐந்து குழந்தைகளுடன் கர்ப்பமாக இருப்பது எல்லோருக்கும் தெரியும். நேற்று இரவு திடீரென்று இரண்டு குழந்தைகளை வேறு தனியார் மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். இங்கே NICU இல் இடம் இல்லை என்று என்னிடம் சொன்னார்கள். நான் ஒரு ஏழை. தனியார் மருத்துவமனை கட்டணத்தை செலுத்துவது எனக்கு மிகவும் கடினம்."
 
பிரகாஷின் குற்றச்சாட்டுகள் குறித்து ரிம்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் குழந்தைகள் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் NICU படுக்கைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டதாகக் கூறுகின்றனர். அதனால்தான் அவரது இரண்டு குழந்தைகளை உடனடியாக தனியார் மருத்துவமனையின் என்ஐசியூவில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.
 
"NICU இல் குறைந்த எண்ணிக்கையிலான படுக்கைகளே உள்ளன. அவற்றில் ஏற்கனவே பிற வேறு சிசுக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் இருப்பதால் அந்தக்குழந்தைகளையும் வெளியே அனுப்ப இயலாது. அங்கிதாவின் விஷயத்தில், முன்கூட்டிய பிரசவம் நடந்தது. வென்டிலேட்டர் அல்லது இன்குபேட்டரை முன்கூட்டியே ரிசர்வ் செய்வது எப்படி சாத்தியம். அவரது கணவர் பிரகாஷ் சாவின் குற்றச்சாட்டுகள் சரியல்ல. அவரது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற இந்த அறிவுரை வழங்கப்பட்டது. எங்கள் முன்னுரிமை குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவது. யாருக்கும் எதிராக பாகுபாடு காட்டுவது அல்ல," என்று பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் ஒரு மூத்த மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
ஆயுஷ்மான் கார்டின் நன்மைகள்
செவ்வாய்க்கிழமை மாலையில் பிறப்புச் சான்றிதழ்கள் அளிக்கப்பட்ட பிறகு குழந்தைகளின் பெயர் அவர்களின் ஆயுஷ்மான் கார்டில் அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் தற்போதைக்கு அவர்கள் பணம் கட்ட வேண்டியதில்லை. இருப்பினும், ராஞ்சிக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டது, தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவமனைக்கு வெளியே மருந்துகளை வாங்குவது போன்ற செலவுகள் காரணமாக கடன் வாங்க வேண்டிவந்ததாக பிரகாஷ் பிபிசியிடம் கூறினார்.
ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்த கின்னஸ் சாதனை, மொராக்கோவைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற பெண்ணின் பெயரில் உள்ளது.
 
2021 மே மாதம் அவர் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவற்றில் 5, பெண் குழந்தைகள். 4, ஆண் குழந்தைகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்