வேர்களை வெறுக்கும் விழுதுகள்: 100 கிராமங்களில் 150 கொலைகள்

திங்கள், 15 டிசம்பர் 2014 (17:13 IST)
மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சேகரித்த புள்ளிவிவரங்களின்படி 100 கிராமங்களில் மட்டும் குறைந்தது 150 முதியோர் கொலைகள் நடந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
 
தமிழ்நாட்டில் நடக்கும் முதியோர் கொலைகள் குறித்து முறையான விரிவான, பக்கச்சார்பற்ற ஆய்வுகள் எவையும் அரசாங்கத்துறைகளாலோ அரசு சார்பு அமைப்புக்களாலோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்த பின்னணியில் இதுகுறித்து கிடைக்கும் தரவுகள் அனைத்துமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேகரித்த தனிப்பட்டத் தகவல்கள் மட்டுமே.
 
அப்படியானதொரு கணக்கெடுப்பை உசிலம்பட்டியில் இருக்கும் யுரைஸ் என்கிற தொண்டு நிறுவனம் மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 100 கிராமங்களில் மேற்கொண்டது. தமது நிறுவன களப்பணியாளர்கள் சேகரித்த தரவுகளின்படி இந்த குறிப்பிட்ட 100 கிராமங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட முதியோர் கொலைகள் நடந்திருப்பதாக தமக்கு தெரியவந்திருப்பதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் யுரைஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் நெப்போலியன் ராஜ்.
 
இப்படிப்பட்ட முதியோர் கொலைகள் நடப்பதாக முன்கூட்டியே தமக்குத் தெரியவந்தால் அதனை தடுக்க தமது களப்பணியாளர்கள் எல்லா வகைகளிலும் முயல்வதாகவும், சில சமயம் தம்மால் முதியோர் கொலைகள் நடக்காமல் தடுக்க முடிந்திருந்தாலும், வேறு சமயங்களில் தம்மால் தடுக்க முடியவில்லை என்கிறார் நெப்போலியன் ராஜ்.
 
தமிழக அரசின் உயரதிகாரி ஒருவரின் வீட்டில் நடந்த முதியோர் கொலையை தடுக்க முயன்றும் முடியாமல் போன பின்னணியில், அந்த கொலை நடந்து முடிந்தபிறகு அதுகுறித்து தாம் உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் காவல்துறையினர் அதில் உரிய அக்கறை காட்ட மறுத்ததன் விளைவாக அந்த சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்டவில்லை என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
முதியோர் கொலைகள் என்று நெப்போலியன் ராஜ் வர்ணிக்கும் சம்பவங்கள் குறைந்தபட்சம் சந்தேக மரணங்களாக கருதப்பட்டு அந்த சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்தாலே சட்டத்திற்குத் தேவைப்படும் சாட்சியங்கள் கிடைக்கக்கூடும். ஆனால் காவல்துறை அப்படி செய்வதில்லை என்கிறார் நெப்போலியன் ராஜ்.
 
இதே புகாரை இந்திய தொழிற்சங்க மையத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் எம் அசோகனும் முன்வைக்கிறார். காரணம் அவரது சொந்த தாய்மாமனுடைய மரணம் முதியோர் கொலை என்பது அவர் புகார்.
 
இரவு நேர காவலராக வேலை செய்துகொண்டு, யாருடைய தயவையும் எதிர்பாராமல் தன் சொந்த வருமானத்தில் வாழ்ந்து வந்த 77 வயதான அசோகனின் தாய்மாமன் ஒருநாள் இரவு வாகன விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவரைக் கொண்டுபோய் விருதுநகர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவர் மகனுக்கு செய்தி சொல்லியனுப்பினார் அசோகன்.
 
இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட அந்த முதியவருக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாக விருதுநகர் அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், அப்படி அறுவை சிகிச்சை செய்தால் 45 நாட்கள்வரை அவரை மருத்துவமனையில் வைத்து பராமரிக்க வேண்டும் என்பதாலும் அத்தனை நாட்கள் அவருடன் மருத்துவமனையில் தங்கியிருக்க தன்னால் முடியாது என்பதாலும் தன் தந்தையை தன் வீட்டில் வைத்து பராமரிப்பதாக பலவந்தமாக அழைத்துச் சென்ற அவரது மகன் மூன்றாவது நாளே அவருக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாகக் கூறுகிறார் அசோகன்.
 
இதைக் கேள்விப்பட்ட அசோகன் இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி கோரியதாகவும், ஆனால் உள்ளூர் அரசியல் தலையீடுகாரணமாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார் அசோகன்.
 
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் உள்ளூர் ஊடகங்களிடம் இந்த தகவலைக்கொண்டு சென்றார் அசோகன். தன் தாய்மாமனைப்போலவே அந்த கிராமத்தை சுற்றி 20 முதியோர் கொலைகள் நடந்ததாக விவரங்களை சேகரித்து ஊடகங்களுக்கு விவரங்களை வெளியிட்டார் அவர். ஊடக பரபரப்பு காவல்துறையை இதில் கொஞ்சம் செயற்பட வைத்தாலும், மூன்றுமாத விசாரணையின் இறுதியில் அசோகனின் புகாருக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதாக காவல்துறை தனது விசாரணை இறுதி அறிக்கையை முடித்துக்கொண்டது.
 
அசோகனின் தாய்மாமனின் சடலம் எரிக்கப்பட்டுவிட்ட நிலையில் அவர் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டதற்கான எந்தவித தடயமும் இல்லை என்பதாக காவல்துறை விளக்கமளித்தது.
 
குடும்பமே கூடி முடிவெடுத்து, ஒட்டுமொத்த சமூகமும் மவுன சாட்சியாக பார்த்திருக்க தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் முதியோர் கொலைகளுக்கு சட்டம் ஏற்கும் சாட்சிகளைத் தமிழக காவல்துறை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் தேடும் சாட்சியங்களோ முதியவர்களின் சடலங்களோடு சேர்ந்து எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்