பயங்கரவாதக் குற்றச்சாட்டு:14 வயது சிறுவனுக்கு 8 மாதங்கள் சிறை

புதன், 27 மே 2015 (11:23 IST)
ஆஸ்திரியாவில் 14 வயது பாடசாலைச் சிறுவன் ஒருவருக்கு பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ், குறைந்தது எட்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
வியன்னாவின் ரயில் நிலையம் மீது குண்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டார் என, இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
 
அந்தச் சிறுவன், அல் கையீதா ஆதரவாளர்கள், மற்றும் இஸ்லாமிய அரசு வலையமைப்புடனும் தொடர்பு வைத்திருந்ததாக அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 
அந்த ரயில் நிலையிம் மீதான தாக்குதலை நடத்திய பிறகு, அச்சிறுவன் சிரியாவில் செயல்பட்டுவரும் தீவிரவாதிகளுடன் சேர எண்ணியிருந்தார் எனவும் அரச தரப்பு கூறுகிறது.
 
எட்டு வருடங்களுக்கு முன்னர் துருக்கியிலிருந்து அச்சிறுவன் ஆஸ்திரியாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், விளையாட்டாகவே குண்டு தயாரிக்கும் எண்ணத்தில் இருந்ததாகவும் அவர் தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார்.
 
தலைநகர் வியன்னாவுக்கு மேற்கேயுள்ள புனித போல்டென் நகரில் வெளியாருக்கு அனுமதியில்லாத வகையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்