'சுதந்திர சதுக்கத்தில் ஜோடிகளுக்கு சுதந்திரம் இல்லையா?' : அமைதிப் போராட்டம்

திங்கள், 7 மார்ச் 2016 (17:14 IST)
இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்திருந்த இளம் ஜோடியை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பலவந்தமாக வெளியேற்றிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் இன்று அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.
 

 
சில தினங்களுக்கு முன்னர், சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்திருந்த இளம் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் காவல் பணியாளர்கள் வெளியேற்றியபோது, அவர்களிடையே நடந்த வாக்குவாதத்தின் வீடியோ காட்சி இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து, சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து சுதந்திர சதுக்கத்தில் அமைதிப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டிருந்தனர்.
 

 
அங்கே அமர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் 'ஜோடிகள் இங்கு அமர்ந்திருப்பதால் என்ன தவறு', 'இருவர் ஒன்றாக அமர்ந்திருப்பது எப்படி குற்றமாகும்?', 'சுதந்திரத்திற்காக சுதந்திர சதுக்கம்' ஆகிய வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியிருந்தனர்.
 
இந்தப் போராட்டம் நடைபெற்றபோது, அங்கு சென்றிருந்த துணை வெளியுறவு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அங்கிருந்த காவலர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்