தடகள வீரர் அசாஃபா பவலுக்கு 18 மாதத் தடை

வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (06:42 IST)
உலகின் மிக வேகமான மனிதர் என்று முன்னர் அறியப்பட்டிருந்த தடகள வீரர் அசாஃபா பவலுக்கு 18 மாதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தான ஆக்ஸிலோஃப்ரைன் எனும் மருந்தை அவர் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டதால் அவர் மீதான இந்தத் தடையை ஜமைக்கா நாட்டு அதிகாரிகள் விதித்துள்ளனர்.
 
31 வயதாகும் அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜமைக்கா தேசியத் தடகளப் போட்டிகளின் போது தடை செய்யப்பட்டுள்ள இந்த மருந்தை பயன்படுத்தியிருந்தது தெரியவந்துள்ளது.
 
எனினும் இந்தத் தடை பின்தேதியிட்டு விதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி அது முடிவுக்கு வருகிறது.
 
தன்மீது விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து அசாஃபா பவல் விளையாட்டுத் துறைக்கான சர்வதேசத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.
 
அவரைப் போலவே தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் மற்றொரு ஜமைக்க வீரரான ஷெரோன் சிம்ஸனுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அந்த இருவரும் பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 
உலகளவில் உசைன் போல்ட்டின் ஆளுமை ஏற்படும்வரை குறுந்தூர ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் அசாஃபா பவலின் ஆதிக்கமே இருந்து வந்தது.
 
கடந்த 2007 ஆம் ஆண்டு 100 மீட்டர் தூரத்தை 9.74 விநாடிகளில் ஓடி அவர் உலகச் சாதனை படைத்திருந்தார். ஆனாலும் அவர் அதற்கும் குறைவான நேரமான 9.72 நொடிகளிலும் ஓடியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்