இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கூறி வழக்கு

புதன், 16 ஏப்ரல் 2014 (07:07 IST)
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய இராணுவம், இலங்கை இராணுவத்துக்கு துணையாகக் களத்தில் செயற்பட்டது என்று குற்றஞ்சாட்டி அதனை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு ஒன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்படி நடந்திருந்தால், நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய அப்படியான நடவடிக்கை இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியுள்ள வழக்கை தாக்கல் செய்த டில்லி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரான ராம் சங்கர், அது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை மன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து இராணுவத்தை செயற்படுத்த இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறும் இராணுவ ஆய்வாளரான கர்னல் ஹரிஹரன் அவர்கள், ஆனால், அவை குறித்து பின்னர் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை, இந்திய இராணுவத்தினர் களத்தில் இலங்கைப் படையினருக்கு உதவி வழங்கியதாகக் கூறுவதை, அந்தப் போர் காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அவர்கள் மறுத்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்