இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் : 105 வயது முதியவர் நம்பிக்கை

ஞாயிறு, 3 மே 2015 (16:15 IST)
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் என்று தான் நம்புவதாக 105 வயது முதியவர் ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


 
வவுனியா குருமண்காட்டில் வசித்து வரும் வேலாயுதம் சதாசிவம் ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரியாவார்.
 
நாட்டில் பல தசாப்தங்களாக நிலவிய அரசியல் பிரச்சனைகள் குறித்து தான் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தற்போது ஆட்சியிலுள்ள புதிய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதை கவனிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
 
பல தசாப்தங்கள் நீடித்த இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு அடுத்த 5 ஆண்டுகளில் சாத்தியமாகும் என்று தான் நம்புவதாகவும் வேலாயுதம் சதாசிவம் கூறுகிறார்.
 
எனினும் அந்தத் தீர்வு விரைவாக எட்டப்படுவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் போன்றோர் கூடுதலாக ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
அதேபோல் நாட்டில் நிர்வாகத்துறையில் உள்ள அதிகாரிகள் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டிய தேவையுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
 
தான் பணியாற்றிய காலத்தில் அதிகாரிகளிடம் காணப்பட்ட நேர்மை இப்போது இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
 
நூறு வயதைக் கடந்த நிலையிலும் அரசியல், ஆன்மீகம், பொது வாழ்க்கை போன்ற விடயங்களில் தெளிவாகச் சிந்திக்கத்தக்கவராக வேலாயுதம் சதாசிவம் திகழ்கிறார் என்று அவரை சந்தித்துவந்த பிபிசி தமிழோசையின் வட-இலங்கைச் செய்தியாளர் மாணிக்கவாசகம் கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்