மனிதனின் கடைசிப் பிறவியில் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்?

வியாழன், 5 நவம்பர் 2009 (18:43 IST)
ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதன் எத்தனை பிறவி எடுப்பார் என்பதை கணிப்பது பற்றி முந்தைய பதில்களில் கூறியிருந்தீர்கள். ஒருவர் தனது கடைசிப் பிறவியை எடுக்கும் போது அவரது வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்.

அதாவது ஆசைகளுக்கு அடிபணியாமல், திருமணம் செய்து கொள்ளாமல் துறவறம் பூண்டு பிற உயிர்களின் நன்மைக்காகவே அவர் வாழ்க்கை நடத்துவாரா?

பதில்: ஜோதிடத்தில் தற்போது 9 கிரகங்கள் (நவகிரகங்கள்) உள்ளன. ஆனால் முற்காலத்தில் 7 கிரகங்கள் மட்டுமே இருந்ததாக சங்க கால நூல்கள் கூறுகின்றன. அதன் பின்னர் கேது, ராகு ஆகிய 2 நிழல்/சாயா கிரகங்கள் ஜோதிடத்தில் இடம்பெற்றதாக வரலாறு கூறுகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் இதனை சூரிய கரும்புள்ளி (கேது), சந்திரக் கரும்புள்ளி (ராகு) என்று கூறுகின்றனர்.

ஒருவர் ராகுவின் ஆதிக்கத்தில் தனது கடைசிப் பிறவியை முடித்துக் கொள்கிறாரா? அல்லது கேதுவின் ஆதிக்கத்தில் முடித்துக் கொள்கிறாரா? என்பதை முதலில் ஜோதிட ரீதியாக கணிக்க வேண்டும்.

ராகுவின் ஆதிக்கத்தில் அல்லது ராகுவின் நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி ஆகியவை யோக நிலையில் இருந்து மோட்ச ஸ்தானமும் வலுவாக அமைந்து இறுதிப் பிறவியை அவர் முடித்துக் கொள்பவராக இருந்தால், அவருக்கு அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உணவு, உடை, வாகனம், மனைவி, குழந்தை, வசதி வாய்ப்பு ஆகியவற்றை அனுபவித்த பின்னரே அவர் முக்தி அடைவார்.

ஆனால் கேதுவின் ஆதிக்கத்தில் முக்தி அடைபவரின் வாழ்க்கை நிலை இதற்கு நேர்மாறாக இருக்கும். அதாவது, சிறுவயதில் இருந்தே துறவறம் எய்துதல், பள்ளிப் பருவத்திலேயே காவி உடை அணிவது போன்றவை அவருக்கு நிகழும். திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகலாம். குழந்தை பிறந்தாலும், அவர்களால் அவஸ்தைப்பட்டு அதன் பின்னர் முக்தி அடைய நேரிடும்.

எனவே, ஒருவரின் ஜாதகத்தை முழுமையாக கணித்த பின்னரே அவரின் இறுதிப்பிறவி எப்படி இருக்கும் எனக் கூற முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்