சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் அமைக்கும் கோயில், திருமலை கோயிலைப் போல் புகழ் பெறுமா?

உலகம் முழுவதும் பல இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. கோயில் நிர்மாணிப்பதில் ஆகம விதிகள், சாஸ்திரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இயற்கையின் (பஞ்ச பூதங்கள்) ஆதிக்கம் அப்பகுதியில் எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மகான்கள், சித்தர்களை எடுத்துக் கொண்டால், மலைகள், வனப்பகுதி, குன்று, அருவிகள் ஆகிய பகுதிகளிலேயே இறைவனை நினைத்து யோகநிலையில் அமர்ந்து தவம் செய்தனர். அங்குதான் இறைவன் இருக்கிறான் என்றும் அவர்கள் நம்பினர்.

இப்போது திருப்பதியை எடுத்துக் கொண்டால், ஏழு மலைகள் சூழப்பட்ட பிரதேசத்தில் (திருமலை) அந்தக் கோயில் அமைந்துள்ளது. இதில் மலைகளுக்கு மட்டுமின்றி, அதில் அடங்கியுள்ள மரங்கள், செடி கொடிகளின் மூலிகைத் தன்மை, சீதோஷ்ண நிலை ஆகியவற்றுக்கு தனி ஆதிக்க சக்தி உண்டு. இவை அனைத்தும் அங்கு வீற்றுள்ள வெங்கடாஜபல் பெருமாளின் சக்தியை மேலும் அதிகரித்துக் காட்டுகிறது.

அதன் காரணமாக கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பலன், மன நிம்மதி கிடைக்கிறது. இதற்கு இயற்கையின் சூழலும் ஒரு காரணமாகும். அதுமட்டுமின்றி கொங்கனி முனிவர் வாழ்ந்து, தவம் புரிந்ததும் இந்த திருமலையில்தான். பொதுவாக அடியார்கள், முனிவர்கள் தவம் செய்த இடத்தில் இருக்கும் கோயில்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். ஜீவ சமாதிக்கு அருகில் மூலவர் இருப்பார்.

எனவே, திருப்பதி தேவஸ்தானம் சென்னையில் அமைக்க உள்ள கோயிலில் திருமலை வெங்கடாஜலபதி கோயிலுக்கு உள்ள ஆக்ரஷ்ன சக்தி கிடைப்பது சாத்தியமில்லாதது. இங்கு கொங்கனி முனிவர் தவம் செய்ததாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனாலும், ஒரு சில சக்கரங்களை பிரதிஷ்டை செய்து, ஆகம விதிகளை உணர்ந்த வேத வல்லுனர்களைக் கொண்டு குறிப்பிட்ட மந்திரங்களை பல லட்சம் முறை ஜெபித்து (ஆவர்த்தி செய்து) ஓரளவு ஆக்ரஷ்ன சக்தியை உருவாக்கி மக்களுக்கு பலனளிக்க முடியும்.

ஆனால் சப்தகிரிக்கு (திருமலை) இணையாக சென்னையில் அமைக்கப்படும் கோயில் பிரபலமடைய வாய்ப்பில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்