சனி கிரகத்தை சுற்றி பிரம்மாண்ட வளையத்தை நாசா கண்டறிந்துள்ளது பற்றி?

திங்கள், 12 அக்டோபர் 2009 (18:14 IST)
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் ஒன்றான சனியைச் சுற்றி புதிய வளையத்தைக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா ஒரு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

FILE




















சனியைச் சுற்றில் பல வளையங்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும், தற்போது நாசா கண்டறிந்துள்ள வளையம் சனியைச் சுற்றி உள்ள வளையங்களில் மிகப் பெரியதாகும்.

அதன் அளவைக் கணக்கிட்டு கூறுவதற்காக நாசா தெரிவித்துள்ள உவமை என்னவென்றால், புதிதாக கண்டறியப்பட்டுள்ள பிரம்மாண்ட வளையத்திற்குள் சுமார் ஒரு பில்லியன் பூமிகளை அடக்கிவிட முடியும்.

ஜோதிடத்தில் இந்த வளையங்கள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிரம்மாண்ட வளையம் இருப்பது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளதா? அல்லது இந்த வளையத்தைக் கண்டறிந்தது வானியல் ஆராய்ச்சியில் மட்டுமின்றி ஜோதிடத்திலும் புதிய அத்தியாயத்தை துவக்குமா?

பதில்: நவகிரகங்களிலேயே சனி மிகவும் வலுவான கிரகம். அதனால்தான் அதனை ராஜகிரகம் என்று அழைக்கிறார்கள். மக்களிடையே சனிப்பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதற்கும் இதுவே காரணம்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சனி கிரகத்தைச் சுற்றிப் பல துணைக் கோள்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி கரு வளையத்திற்குள் சனி இருப்பதை பல சித்தர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

ஒருவரது ஜாதகத்தில் சனி சிறப்பாக இல்லாமல் இருந்து அவர்களுக்கு ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, ராகு தசையில் சனி புக்தி, சனி தசையில் ராகு புக்தி நடப்பவர்களுக்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் அல்லது கன்னக் கதுப்புகளில் கருப்பு புள்ளிகள்/திட்டுகள் உருவாகும் என சாமுத்ரிகா லட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதால், தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களிடமும் அதனை அது பிரதிபலிக்கிறது. சனியின் நிறம் கருப்பு (கும்பம்) என்று ஜோதிடம் கூறுகிறது. அதேபோல் நீல நிறமும் (மகரம்) சனிக்கு உரியதே.

கருப்பு, நீல நிற வளையத்திற்குள் சனி இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டு விட்டாலும், இனி வரும் காலங்களில் அறிவியல் அறிஞர்கள் சனியைச் சுற்றி மேலும் பல வளையங்களை கண்டறிவர்.

பல வளையங்களுக்கு நடுவில் இருப்பது சனி கிரகம். இதனை உணர்த்தும் விதமாக சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு வளையம் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் அரசியல்வாதியாக இருந்தாலும், சிறைக் கைதியாக இருந்தாலும் அவர்களைச் சுற்றி பாதுகாப்பு வளையம் இருக்கும். ஒருவர் ஜாதகத்தில் சனி எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவர்களின் வாழ்வு இருக்கும்.

தற்போது சிம்மத்தில் இருந்து கன்னிக்கு சனி பெயர்ச்சியாகியுள்ளார். கன்னி புதனின் வீடு என்பதால், சனியைப் பற்றிய பல தெரியாத விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும். எனவே சனி கிரகத்தைப் பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்பது நிச்சயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்