சனிதசை நடக்கும் போது பொறுமை இழக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஒருவருக்கு சனிதசை நடக்கும் போது பல்வேறு இன்னல்கள் ஏற்படும் என்றும், அப்போது அவர் அமைதியாக இருக்க நினைத்தாலும், அவரைத் தேடி பிரச்சனைகள் வரும் என்றும் கூறுகிறார்கள்? சனிதசையின் போது பொறுமையாக இருக்க என்ன செய்யலாம்?

பதில்: சனிதசை, சனிபுக்தி, ஏழரைச்சனி, அர்தாஷ்டம சனி நடக்கும் காலங்களில் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் சிரமம். இதற்கு காரணம் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரை எந்நேரமும் சீண்டிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு பணியை/செயலை இரவு-பகலாக கண்விழித்து அவர் சிறப்பாகச் செய்திருந்தாலும், ஒரு சிலர் அதில் உள்ள குறைகளை கூறி விமர்சனம் செய்வார்கள். பொதுவாக சனி தசை/புக்தி துவங்கும் போதே சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட வேண்டும்.

ஒரு செயலை சிறப்பாகச் செய்தால் மற்றவர்களிடம் இருந்து பாராட்டுகள், வரவேற்புகள் கிடைக்கும் என்பதை நினைக்கக் கூடாது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் உபாதைகளைத் தவிர்க்க இயற்கை உணவுகளான கேழ்வரகு, கம்பு உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறர் தன்னைப் புகழ்ந்து பேசினாலும், இழந்தாலும் அவற்றை சரிசமமாக பாவிக்கும் வகையில் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கால் கடுக்க நடப்பது சனியின் தாக்கத்தைக் குறைக்கும். மேலும் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

சனிதசை நடக்கும் போது பிரச்சனைகள் வராமல் இருக்க, அனைத்து தரப்பினரையும் அனுசரித்துச் செல்ல பழகிக்கொள்ள வேண்டும். இன்பம்-துன்பம் கலந்ததே வாழ்க்கை என்பதை சனியைப் போல் யாரும் உணர்த்த முடியாது.

அதேபோல் தெளிந்த ஞானத்தையும், உலக அனுபவத்தையும் தம்மைச் சுற்றி இருப்பவர்கள் மூலம் ஒருவருக்கு உணர்த்துவதும் சனிதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்