குரு, சனி ஆகிய இரண்டும் ராஜகிரகங்கள் என அழைக்கப்படுவது ஏன்?

சனி, 20 டிசம்பர் 2008 (15:46 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகங்கத்திற்கும் தனி ஆற்றல் உண்டு. உதாரணமாக சூரியன் என்றால் அதற்கு ஆக்கும், அழிக்கும் ஆற்றல் அதிகம். இதே போல் அனைத்து கிரகங்களுக்கும் நேர்மறை, எதிர்மறை கதிர்வீச்சு உண்டு.

ஆனால் குருவுக்கு எதிர்மறைக் கதிர்வீச்சு சற்றே அதிகம் என்று கூறலாம். தற்போது (டிசம்பர் 6ஆம் தேதிக்குப் பின்னர்) நீச்சமடைந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே உலகப் பொருளாதாரத்தை கடும் சரிவுக்கு உள்ளாக்கிவிட்டார்.

அதாவது சுபகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளஅந்தக் காலகட்டத்தில் மட்டும் உருவாகி உடனடியாக நிவர்த்தியாகிவிடும். ஆனால் சுபகிரகங்கள் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு முன்பாகவே அதற்கான சுப அல்லது அசுப பலன்களை வழங்கத் துவங்கிவிடுவர்.

பாவ கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்து அதனால் ஏற்படும் கெட்ட பலன்கள், அந்த கிரகங்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறியவுடன் மாறி விடும். ஆனால் ராஜ கிரகங்கள் ஒரு பாவ வீட்டில் அமர்ந்திருந்த பின்னர் சுப வீட்டிற்கு சென்றாலும் அங்கிருக்கும் பாதி நாட்கள் கெட்ட பலன்களை வழங்கி விட்டு அதன் பின்னரே முழுமையாக சுப பலன்களை வழங்கும்.

இதன் காரணமாகவே குரு, சனி ஆகிய 2 கிரகங்களும் ராஜ கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நீதிக்கோள் சனி:

நவகிரகங்களில் சனியைப் பொறுத்தவரை அதனை நீதிக்கோள் என்று கூறுவர். ராகு, கேது தவிர்த்த மற்ற அனைத்து கிரகங்களுக்கும் சொந்த வீடு (அறிவியல் ரீதியாக சுற்றுப்பாதை) உண்டு.

இதில் பார்க்கும் போது கர்ம வினை என்னவோ அதனை அப்படியே பிரதிபலிக்கும் கிரகம் சனி. ஏழரைச் சனி, சனி தசை உள்ளிட்ட தருணங்களில் மிகவும் கஷ்டம் ஏற்பட்டாலும் அவற்றை சகித்துக் கொண்டு அதனைத் தாண்டி வாருங்கள் என என்னிடம் வருபவர்களிடம் கூறியிருக்கிறேன். அதற்கான மன வலிமையை பெற வேண்டுமானால் இறைவனை பிரார்த்தியுங்கள். அதைவிடுத்து இடர்பாடுகளை குறைக்க பிரார்த்திக்காதீர்கள் என்பேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்