கிரக தோஷம் இருப்பவர்கள் சிவனுக்கு பூஜை செய்தால் போதுமா?

வியாழன், 29 அக்டோபர் 2009 (13:05 IST)
பொதுவாக தோஷம் உள்ள ஜாதகர்கள் சிவனுக்கு மட்டும் பூஜை செய்தால் போதுமா அல்லது தோஷமடைந்த கிரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டுமா?

பதில்: பரிகாரங்கள் என்றவுடன் உடனடியாக கோயில்களை மட்டுமே பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஏராளமான பரிகாரங்களை மக்களால் செய்ய முடியும்.

உதாரணமாக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். மேலும் செவ்வாய் பூமிக்காரகன் என்பதால் கோயில் சொத்துக்களை வைத்திருந்தால் அதனை உரிய இடத்தில் சேர்த்துவிடலாம். இதேபோல் அடுத்தவர் இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும் அதனை விட்டுத் தரலாம்.

செவ்வாய் சகோதரத்துவத்திற்கும் உரிய கிரகம் என்பதால் சகோதரர்கள், சகோதரிகள் முன்னேற்றத்திற்கு உதவுவதுடன், அவர்களுடன் நட்புறவைத் தொடர்வது நல்லது. இதுபோன்று செய்வதால் செவ்வாய் மகிழ்ச்சியடைவார். அவரால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 4 பெண்கள் உள்ளனர். அவரது ஜாதகத்தில் செவ்வாய் மோசமாக இருந்தது. அவரின் 4 பெண்களின் ஜாதகத்திலும் செவ்வாய், சூரியனும் ஒன்றாக இருந்தது. அதுமட்டுமின்றி அவற்றுடன் ராகு (அல்லது) கேது (அல்லது) சனியும் சேர்க்கை பெற்றிருந்தனர்.

அவரின் 4 பெண்களும் நன்றாகப் படித்து, நல்ல வேலையில் உள்ளனர். அழகிலும் குறைவில்லை. ஆனால் 25 வயதைக் கடந்த பின்னரும் யாருக்கும் திருமணம் நடைபெறவில்லை. வரும் வரன்கள் எல்லாம் தள்ளிப் போனது.

ஜாதகத்தை தீவிரமாக ஆராய்ந்த பிறகு அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, “கோயில் சொத்து ஏதாவது உங்களின் வசம் இருக்கிறதா?” என்பதுதான். அதற்கு அவர் அளித்த பதில், “எங்கள் பரம்பரைக்கே கோயில் சொத்தை அபகரிக்கும் பழக்கம் இல்லை. வேண்டுமானால் எனது கிராமத்தில் வந்து கேட்டுப் பாருங்கள். 4 கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியுள்ளேன” என்று கோபமாக பதிலளித்தார்.

“மன்னித்து விடுங்கள், உங்களுக்கு மேற்கொண்டு பலன் சொல்ல நான் தயாராக இல்லை. தயவு செய்து நீங்கள் கிளம்பலாம் என்ற” நானும் பதிலளித்தேன். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் ஏன் என்று கேட்டார்.

அதற்கு “உங்கள் ஜாதகம் கூறியதைத்தான் நான் உங்களிடம் தெரிவித்தேன். அதை நீங்கள் மறுக்கிறீர்கள். கோயில் சொத்தை அபகரிக்காதவர்களுக்கு இதுபோன்ற ஜாதக அமைப்பில் குழந்தைகள் பிறக்காது. எனவே, ஒன்று நீங்கள் பொய் சொல்ல வேண்டும் அல்லது நான் கற்ற ஜோதிடம் தவறாக இருக்க வேண்டும” என்றேன். இதைக் கேட்ட அவர் உடனடியாக சென்று விட்டார்.

ஒரு 6 மாதத்திற்குப் பின்னர் மீண்டும் என்னைச் சந்திக்க வந்த அந்த விவசாயி மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். விசாரித்ததில், மகள்களுக்கு வரும் வரன் எல்லாம் வாசல் வரை வந்துவிட்டு சென்று விடுகின்றனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் கூறியது போல் கோயில் சொத்தை நான் அபகரித்தது உண்மைதான். கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் எனது வசம் உள்ளது. அதில் விளையும் நெற்பயிரை கோயிலுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு இருந்தாலும், அதில் ஒரு பகுதியை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை நான் எடுத்துக் கொண்டேன்.

மேலும், அந்த வருமானத்தின் மூலமாகத்தான் எனது 4 பெண்களையும் வளர்த்து, படிக்க வைத்தேன். அதுமட்டுமின்றி எனது வாழ்க்கைத் தரத்தையும் வளப்படுத்திக் கொண்டேன் என்றார். தனது பெண்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்யலாம் எனக் கேட்டார்.

முதலில் உங்கள் வசமுள்ள கோயில் சொத்தை நிர்வாகத்திடம் சேர்த்து விடுங்கள். அடுத்ததாக சம்பந்தப்பட்ட கோயிலுக்கு அன்னாபிஷேகம் செய்யுங்கள். அதன் பின்னர் முறைப்படி கோயிலுக்கு சேர வேண்டியதை கொடுத்து விடுங்கள் என்றேன்.

கிரக தோஷம் உள்ளவர்கள் அனைவரும் சிவனை வழிபட்டால் போதும் என்று கூற முடியாது. ஒவ்வொரு கிரகத்திற்கும் தனி காரகத்துவம் உள்ளது. பெருமாளுக்கு உரிய கிரகம் புதன். சூரியனுக்கு உரிய கிரகம் சிவன்.

எனவே, புதனால் ஏற்படும் தோஷத்தைப் போக்கிக் கொள்ள வைணவத் ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளலாம். இதுபோல் ஒவ்வொரு கிரகத்திற்கு உள்ள காரகத்துவத்தை உணர்ந்து பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

சிலருக்கு மாற்று மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல அறிவுறுத்துவேன். என்னிடம் வந்த ஒருவருக்கு சனி, ராகு, செவ்வாய் ஆகிய 3 கிரகங்களும் ஒன்றாக இருந்தது. ஜாதகத்தை என்னிடம் கொடுக்கும் போதே, “ஸார்... தயவு செய்து பரிகாரம் மட்டும் கூறாதீர்கள். ஏகப்பட்ட ஜோதிடர்களிடம் சென்று ஏராளமான பரிகாரங்களை செய்து விட்டேன” என்றார்.

நான் கூறும் பரிகாரத்தை செய்து பாருங்கள் என்றேன். முதலில் தயங்கியவர் பின்னர் அதனை செய்வதாக ஒப்புக்கொண்டார். விதவைப் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அல்லது அவர்களின் குழந்தைகள் படிப்புக்கு உதவுங்கள் என்றேன். புகழ்பெற்ற தர்காவுக்கு சென்று வரவும் அறிவுறுத்தினேன்.

ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் என்னை வந்து பார்த்த அவர், “நீங்கள் கூறிய 2 பரிகாரங்களையும் செய்தேன். பிறரிடம் இருந்த எனது பணம் வட்டியும், முதலுமாக திரும்பி விட்டது. கடந்த 10 ஆண்டாக இழுபறியில் இருந்து வழக்கிலும் வெற்றி கிடைத்து விட்டத” என்றார்.

எனவே, பரிகாரம் என்பதை சாதாரண விடயமாக கருதக்கூடாது. ஏதாவது ஒரு கோயிலைச் சொல்லி அங்கு செல்லுங்கள் எனக் கூறக்கூடாது. சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தை துல்லியமாகக் கணித்து பரிகாரங்களைச் சொல்ல வேண்டும். தவறாகக் கூறினால் அது எதிர்மறை பலன்களை அளிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்