ஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமா?

வெள்ளி, 27 நவம்பர் 2009 (13:40 IST)
ஒருவருக்கு இளம் வயதிலேயே உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என்பதை ஜாதகத்தின் மூலம் அறிய முடியுமா?

பதில்: ஒருவரின் அழகு, அறிவு ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி. அதற்கு அடுத்தபடியாக உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை லக்னாதிபதியும், சந்திரனும் காரணமாகிறார்கள்.

எனவே, ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். லக்னாதியும், சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்கள் எப்போதும் நோயாளிகளாகவே இருப்பர்.

லக்னாதிபதி மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்திருந்தால் உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தாலும் நோயால் (பால்வினை, புற்றுநோய்) உயிருக்கு பாதிப்பு ஏற்படும்.

சமீபத்தில் என்னிடம் ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவருக்கு லக்னாதிபதியுடன் சனி, ராகு சேர்க்கை இருந்தது. பார்ப்பதற்கு நல்ல ஆஜானுபாகுவாக காட்சி அளித்தார். ஜாதக அமைப்பை வைத்து, “உங்களுக்கு ஏதாவது பெரிய வியாதி அல்லது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்க வேண்டும” என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர், “இன்று வரை மருத்துவரைப் பார்க்கச் சென்றதில்லை. மருந்து, மாத்திரை சாப்பிட்டதில்ல” என்று மிடுக்காக பதிலளித்தார்.

அதனை உறுதியாக மறுத்த நான், “உங்களுக்கு நிச்சயம் ஏதாவது உடல் ரீதியான குறை இருந்தே ஆக வேண்டும” என்று கூறினேன். அதன் பின்னர் சற்று நேர தயத்திற்குப் பின்னர் பேசிய அவர், தனக்கு மலட்டுத்தன்மை இருப்பதாகவும், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகவும், மருந்து, மாத்திரை மூலம் குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் ” கூறினார்.

எனவே, லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் அல்லது அவருக்கு மலட்டுத்தன்மை, ஆண்மையின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். பெண்ணாக இருந்தால் கரு முட்டை உருவாகாத குறைபாடு இருக்கும்.

லக்னாதிபதி+ சந்திரன் ஆகிய இரண்டும் ராகு/கேதுவுடன் சேர்க்கை பெற்று, செவ்வாயின் பார்வை பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு உறுதியாக புற்றுநோய் ஏற்படும் எனக் கூறலாம்.

அதுபோன்ற ஜாதக அமைப்புடன் வருபவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக சில விடயங்களைக் கூறுவேன். உடலில் எந்தப் பகுதியில் கட்டி ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று காட்டுங்கள் என்பேன். காரணம், புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறிந்தால் உயிர்பலி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

கடக லனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 11ஆம் இடத்தில் (ரிஷபம்) சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு ஆகியவை சேர்க்கை பெற்றிருந்தது. லக்னாதிபதியான சந்திரன், 12இல் மறைந்திருந்தார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்க வேண்டும். எனவே அதுபற்றி அவரிடம் கேட்டேன்.

முதலில் மறுத்தவர், பின் தனக்கு பால்வினை நோய் இருப்பதை ஒப்புக்கொண்டார். எய்ட்ஸ் நோய்க்கு முந்தைய நிலையில் தாம் தற்போது இருப்பதாகவும், மருந்து, மாத்திரைகளால் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக வருத்தத்துடன் கூறினார்.

எனவே, ஒருவரின் ஜாதக அமைப்பை வைத்து அவருக்கு என்ன மாதிரியான நோய்கள் ஏற்படும். அதனை குணப்படுத்த முடியுமா? நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டிருப்பாரா? என்பது போன்ற தகவல்களை கணிக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்