நா‌ட்டி‌ற்கு‌‌ம் ப‌ரிகார‌ம் உ‌ண்டா?

வியாழன், 27 டிசம்பர் 2007 (13:18 IST)
webdunia photoWD
கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட தனிமனிதர்களுக்கு, குடும்பங்களுக்கு பரிகாரங்கள் உள்ளது போல நாட்டிற்கும் பரிகாரம் உண்டா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் எல்லைக் கடவுள் என்று ஒன்று உண்டு. முனீஸ்வரர், ஐயனார், பேச்சி, காத்தவராயன், திரெளபதி, எல்லையப்பன் என்று பல்வேறு பெயர்களில் எல்லைக் கடவுள்களை வழிபடும் வழக்கம் உள்ளது.

இப்படி ஒவ்வொரு ஊருக்கும் எல்லையும், அந்த எல்லைகளைக் காக்க கடவுளும் இருப்பது போல நாட்டிற்கும் அதாவது நாட்டின் எல்லையில் காப்புக் கடவுள் உண்டு.

webdunia photoWD
சோழ பேரரசர் ராஜ ராஜ சோழனின் விரிந்து பரந்துபட்ட சாம்ராஜ்யத்தில் ஈசானிய திசையின் காவல் தெய்வமே திண்டிவனத்தை அடுத்த திருவக்கரையில் உள்ள வக்ரகாளியம்மன் தெய்வமாகும்.

அங்கு சங்கராபரணி ஆறு ஓடுகிறது. ஆற்றின் கிழக்குப் பக்கம் சோழர் ராஜ்யம், மேற்குப் பக்கம் பல்லவராஜ்யம். பல்லவர்கள் பல முறை படையெடுத்து ஜெயம்கொண்ட சோழபுரம் வரையெல்லாம் வந்து திரும்பியுள்ளனர்.

ஒவ்வொரு முறை படையெடுக்கும்போதும் நிலங்களை அழித்தல், ஆநிரைக் கவர்தல் ஆகியவற்றால் பெரும் கவலைக்கு ஆளான சோழ மன்னர், தனது ராஜ குருவின் ஆலோசனைப் படி தனது எல்லையில் வக்ரகாளியை பிரதிஷ்டம் செய்து வழிபட்டார்.

அந்த வக்ரகாளியம்மன் சற்று சாய்ந்த நிலையில் அமர்ந்திருப்பார். அவருடைய பார்வை பல்லவ ராஜ்யத்தைப் பார்ப்பது போல் இருக்கும். வக்ர காளியம்மனுக்கு ஆகம விதிப்படி வேள்விகள் குறிப்பாக சத்ரு சம்ஹார வேள்விகள், அபிஷேகங்கள் எல்லாம் செய்தால் ராஜராஜர்.

அதன்பிறகுதான் அப்பொழுது பல்லவ ராஜ்யத்தை ஆண்ட மகேந்திரவர்மன் பலவீனமடைந்தான். உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் கொள்ளை நோய்கள் தாக்கின. படை வீரர்கள் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் படை பலம் குறைந்தது. இயற்கைச் சீற்றங்களால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சலும் குறைந்தது.

சோழப் பேரரசுக்கு நீடித்து வந்த தொல்லை நீங்கியது. இப்படித்தான் பண்டைக் காலத்தில் நாட்டிற்கு பரிகாரம் செய்தனர். ஒவ்வொரு மன்னனும் தனது நாட்டை பலப்படுத்திக் கொள்ள, எதிரியை வீழ்த்த படை பலத்துடன் இவ்வாறு தெய்வ பலத்தையும் பரிகாரம் மூலம் பெற்று வெற்றி பெற்று வந்தனர். இவைகளை எனது பாட்டனார் எனக்கு விளக்கிக் கூறினார்.


webdunia photoWD
ஆனால், இப்பொழுதெல்லாம் எல்லைத் தெய்வங்களும், குல தெய்வங்களும் கேட்பாரற்று பசியோடு கிடக்கின்றன. காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், புதுமணை புகுவிழா எதுவானாலும் முதல் பத்ரிக்கை குல தெய்வத்திற்குத் தான் வைத்து வழிபடுவார்கள்.

இதுமட்டுமின்றி முக்கால்வாசி திருமணங்கள் கோயில்களிலும், ஆலயங்களிலும்தான் நடக்கும். கோயில்களில் இடமில்லாத போதுதான் கோயிலை ஒட்டியுள்ள திருமண மண்டபங்களில் திருமணங்களையும், சுப வைபங்களையும் நடத்தி வந்தனர். ஏனென்றால் தாலி கட்டிய கையோடு கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு வசதியாக இருக்கும்.

கோயில் என்கின்ற இயற்கையை கைவிட்டுவிட்டு இன்றைக்கு நவீன மண்டபங்களில் திருமணத்தை முடித்துக் கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றோம். இன்றைய மாட மாளிகைகள் இருக்கும் இடங்கள் நேற்றைய இடுகாடுகளாக இருந்திருக்கலாம். அந்த மனை அடி உயிரோட்டங்களை யார் அறிவார். எனவேதான் திருமண வாழ்க்கை உறுதியற்றுப் போய் விடுகிறது.

இதனையெல்லாம் உணர்ந்துதான் நமது முன்னோர்கள் கோயிலில் திருமணத்தை வைத்தார்கள்.

எனவே பரிகாரம் என்னவென்றால், எல்லையிலுள்ள நமது கோயில்களை புணரமைக்கலாம். எல்லைக் கடவுள்களுக்கு செய்ய வேண்டிய விழாக்கள், பலிகள் ஆகியவற்றை செய்யலாம். மண்ணின் மைந்தர்களான ஆதிவாசி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடைய பாரம்பரிய வழிபாடுகளை ஊக்குவிக்க வேண்டும். இது மிக மிக அவசியம்.

வழிபாட்டு முறை :

இன்று நாடு அசுர வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எல்லைக் கடவுள்களும், குல தெய்வங்களும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. நமது சென்னைக்கு பல்லவன் சாலையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் எல்லைச்சாமியாவார். அவரைத் தாண்டி எதுவும் இருக்கக் கூடாது. ஆனால் அந்தக் கோயிலுக்கு அடுத்தபடியாக சுடுகாட்டையும் தாண்டி சிறையும், அதற்கு எதிரில் குடியிருப்புகளும் வந்துள்ளன. இவைகள் நல்லதல்ல.

கடற்கரைகளை ஒட்டி நகரங்களே இருக்கக் கூடாது. கடலில் இருந்து ஒரு குறிப்பிட்டத் தூரத்திற்கு எதுவுமே இருக்கக் கூடாது. அந்தக் காலத்தில் குப்பத்து மக்களை மட்டுமே அங்கு குடியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.

webdunia photoWD
அவர்கள் எல்லாக் கேளிக்கைகளிலும் ஈடுபட்டனர். அவற்றில் ஒன்று அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு செய்யும் வழிபாடாகும். அது ஒரு முக்கிய பரிகாரமாகும்.

வாழிடங்களில் ஏற்பட்ட மாறுபாடுகளால் எல்லாவற்றின் இயல்பு நிலையும் சீர்குலைந்துவிட்டது.

கடை‌த்த‌ட்டு ம‌க்க‌ள் வாழு‌ம் இட‌ங்க‌ளி‌ல் மேட்டுக்குடி மக்கள் வாழச் சென்றது, உணவுச் சமநிலையில் ஏற்பட்ட சிதைவு, பூனைக்கு எலி உணவு இப்படி பல்வேறு சுழற்சிகள் இயற்கையாக உள்ளது. இப்பொழுது ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அந்த சுழற்சி கெட்டுவிட்டது. இதுவே எல்லாவிதமான உரசல், முரண்பாடு மற்றும் பிரச்சினைகளுக்கு காரணமாகும்.

அவரவர்களுடைய உறைவிடங்களை அவரவர்களிடமே கொடுத்து விட வேண்டும். சில பகுதிகளில் (நந்திகிராம் போன்ற) அம்மக்களிடம் இருந்து அவர்களின் நிலங்களை வேறொரு தேவைக்காக எடுத்துக் கொள்கின்றனர். இப்படியெல்லாம் செய்வதை தவிர்த்துவிட்டு, மக்களின் இயல்பான வாழ்விடங்களிலேயே (கிராமங்களிலேயே) நவீனத்தைப் புகுத்தலாம். கிராமத்தில் வாழ்பவர்களுக்கு அனைத்து வசதிகளையும் அளித்து கிராமத்திலேயே இருக்கச் செய்ய வேண்டும்.

பஞ்ச பூதங்களின் அடிப்படையிலான சுழற்றி முறையைக் கொண்டதாகவே நமது வாழ்வு இருந்தது. இயற்கையோடு இயைந்த வாழ்வு சீர்படுத்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்டால் அது நாட்டை பலப்படுத்துவது மட்டுமல்ல வலுப்படுத்தவும் உதவும்.