செவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?
சனி, 20 பிப்ரவரி 2010 (15:00 IST)
சகோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார். எனவே ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால் அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு, சகோதர சச்சரவு, தைரியமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக ஏற்படாது.
ஆனால் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலோ, வக்கிரம் அடைந்திருந்தாலோ அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இதேபோல் ராசிக்கு 8இல் இருந்தாலும் சிறு விபத்துகள் ஏற்படும்.
எனவே அதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளைப் பெற முடியும். ஒரு சிலருக்கு ரத்த தானம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது. எனவே அவர்கள் ரத்த வங்கியில் இருந்து வாங்கி, ஏழை நோயாளிகளுக்கு ரத்ததானம் செய்யலாம். இதிலும் ஓரளவு பலன் கிடைக்கும்.
அதாவது விபத்து ஏற்பட்டு அதன் மூலம் ரத்தம் இழப்பதை விட, தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்து விட்டால், விபத்துகளில் சிக்குவதையும் தவிர்க்க முடியும் என்பதற்காகவே இந்த நடைமுறைப் பரிகாரத்தை (ரத்த தானம்) செவ்வாய் மோசமாக இருப்பவர்களுக்கு வலியுறுத்துகிறேன்.