2025 New Year Astrology Horoscope: 12 ராசிகளையும் நலம் அருளும் தெய்வங்களின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் சென்று இந்த ஆண்டில் தரிசனம் செய்து பரிகாரம் செய்வதன் மூலம், தீவினைகள் அகற்றி தெய்வ அருள் பெறலாம். இது இந்த ஆண்டை சிறப்பான ஒன்றாக மாற்ற உங்களுக்கு உதவும்.
12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகாரக் கோயில்கள் ஜோதிட நிபுணர்கள், ஆன்மீக அறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி கோயில் நகரங்களான கும்பகோணம், காஞ்சிபுரம் இரண்டு நகரங்களிலும் 12 ராசிகளுக்கான பரிகாரத் தலங்கள் தனித்தனியாக உள்ளன.
கும்பகோணத்தில் உள்ள 12 ராசிகளுக்கான பரிகாரத் தலங்களை காண்போம்.
மேஷம்: செவ்வாயை ராசியாபதியாக கொண்ட மேஷ ராசியினருக்கு பரிகார ஸ்தலமாக விளங்குவது கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் ஆகும். மேஷ ராசியினரின் ராசிக் கடவுள் சிவபெருமான் என்றபடி இந்த கோவிலுக்கு பசுபதி கோவில் என்ற புராண பெயரும் உண்டு. ராமானுஜரின் குருவான பெரிய நம்பிகளுக்கு வரதராஜ பெருமாள் காட்சியளித்து மோட்சம் அளித்த ஸ்தலம் இது என்பது இதன் மற்றுமொரு சிறப்பு
வரும் 2025ல் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை அடுத்து சனியின் முதல் கட்டம் மேஷத்தின் மீது தொடங்குகிறது. அனைத்து கிரகங்களையும் ஆட்டுவிக்கும் சனி பகவானும் பெருமாளிடம் அடங்குவார். அப்படியான வரதராஜபெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபடுவது சனியின் பாதிப்பை மட்டுப்படுத்தும். மேஷ ராசியில் வரும் அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தோஷ பரிகாரங்களை ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் செய்வது தோஷம் நீங்க சிறந்தது. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கும் இக்கோவில் பரிகார ஸ்தலமாக் விளங்குகிறது.
ரிஷபம்: சுக்கிரனை ராசியாபதியாக கொண்ட ரிஷப ராசியினருக்கு பரிகார ஸ்தலமாக விளங்குவது கும்பகோணத்தில் உள்ள கோமளவல்லி தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி திருக்கோவில். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 3வது ஸ்தலமாக விளங்குகிறது இக்கோவில். பஞ்சரங்க ஸ்தலங்களில் ஒன்றான சாரங்கபாணி திருக்கோவிலில் மூலவராக சாரங்கபாணி, கோமளவல்லி தாயார் மகாலெட்சுமி தேவியாருடன் அருள் பாலிக்கிறார். ரிஷப ராசியினரின் தெய்வமான மகாலெட்சுமி அருள் பாலிக்கும் ஸ்தலம் என்பதால் இது ரிஷப ராசியினரின் தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
12 மாதங்களும் உற்சவம் நடைபெறும் சாரங்கபாணி திருக்கோவிலில், பெருமாளுக்கு உகந்த பயத்தம்பருப்பு வெல்லம், நெய்யினால் செய்த பதார்த்தத்தை வைத்து வழிபடுவது சிறப்பு
மிதுனம்: புதனை ராசியாபதியாக கொண்டு ஸ்ரீமன் நாராயணனை ராசி தெய்வமாக கொண்ட மிதுன ராசியினரின் பரிகார ஸ்தலமாக கும்பகோணத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ சக்கரபாணி திருக்கோவில். நவக்கிரஹங்களின் நாயகனான சூரியன் இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து பலன்பெற்றதன் காரணமாக நவ கிரகங்களால் ஏற்படும் இன்னல்களும், தோஷங்களும் இவ்விடம் வந்து சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும்.
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையால் இங்குள்ள மூலவர் சக்கரபாணிக்கு அர்ச்சனை செய்வது இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பு. சக்கர வடிவமான தாமரை மலரில், எட்டுத்திருக்கரங்களில் எட்டு ஆயுதங்களை ஏந்தி நிற்கும் சக்கரபாணி, இங்கு மட்டுமே தனிக்கோவில் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீமன் நாராயணனை தெய்வமாக கொண்ட மிதுன ராசியின் திருவாதிரை, மிருகசீரிஷம் (3,4ம் பாதங்கள்), புனர்பூசம் (1,2,3ம் பாதங்கள்) நட்சத்திரக்காரர்களுக்கு சக்கரபாணி திருக்கோவில் அனைத்து தோஷங்களுக்குமான, வேண்டுதல்களுக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.