11.11.11 – இன்று பிறப்பவர் ஜாதகம் எப்படி?

வெள்ளி, 11 நவம்பர் 2011 (15:46 IST)
FILE
தமிழ்.வெப்துனியா.காம்: இன்று 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி, அதாவது 11.11.11 என்று வருகிறது. இதற்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எப்படி?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: எண் ஜோதிட அடிப்படையில் இதை பேசுவோம். சந்திரன் ஆதிக்கத் தேதிகள் 2,11,20,29 ஆகும். அதில் மிகவும் சக்தி வாய்ந்தது 11. இரண்டு சூரியன் சேர்ந்தது ஒரு சந்திரன். அதாவது சூரியனின் எண் 1, இரண்டு ஒன்று வருவதால் இது மிகவும் சக்தி வாய்ந்த தேதியாகிறது. இந்த நாளில் பிறப்பவர்களுக்கு கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். நிர்வாகத் திறமையும் அதிகமாக இருக்கும். இசை, நடனம், நாட்டியம் என்று கலைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

இன்றைய தேதியலும் மதியம் 1 மணிக்குள் பிறப்பவர்களுக்கு குரு சந்திர யோகம் உண்டாகும். 1 மணிக்குப் பிறகு பிறப்பவர்களுக்கு சந்திரன் கேதுவுடன் சேர்வதால், அவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள், சிறிய விபத்துகள் ஏற்படும். இந்த தேதியின் கூட்டு எண் 8. இவர்களின் வாழ்க்கையில் சிறியதாக ஒரு பாதிப்பு, துயரம் என்று எப்போதும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, இந்த தேதியில் பிறந்த ஒரு பெண் நன்றாக பாடுகிறாள் என்றால், பாட்டு ஞானமே இல்லாத ஒருவர் கணவராக வருவார். அதுதான் அவர்களுக்கு துயரமாக இருக்கும். தனது வித்தைக்கும், திறனிற்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கத்துடனேயே இருப்பார்கள்.

அது மட்டுமின்றி, மூட்டு வலி, முதுகு வலி, நரம்புக் கோளாறு ஆகியவற்றிற்கு ஆட்பட்டவர்களாகவும் இருப்பார்கள். சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட எண் 8, ஆதலால் இந்த பாதிப்புகள் பொதுவாக இருக்கும்.

ஆயினும், அவர்களின் வாழ்க்கை என்பது இன்றைய நாள் மட்டுமே எல்லாவற்றிற்கும் காரணமாகிவிடாது. கிரகம், லக்னம் ஆகியவற்றையும் கணக்கிட்டுத்தான் உறுதியாக எதையும் கூற முடியும். எனவே இந்த எண்ணை மட்டுமே நினைத்து அப்படியோ இப்படியோ இருக்கும் என்று உறுதியாக எண்ணிவிடலாகாது.

வெப்துனியாவைப் படிக்கவும்