ஜ‌ப்பா‌ன் சுனா‌மி மு‌ன்க‌‌ணி‌க்க முடியாதது ஏ‌ன்?

திங்கள், 14 மார்ச் 2011 (19:41 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு ஏற்பட்ட சுனாமியால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலம் குறித்த எவ்வளவோ விடயத்தை சொல்லக்கூடிய ஜோதிடர்கள் யாரும் இப்படி ஒரு பேரழிவு உள்ளது என்ற விஷயத்தை கோடிட்டுக் கூட காட்டவில்லையே? ஏன்?

ஜோ‌‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: வருடப் பலன் சொல்லும் போது குறிப்பிட்ட தேதியில் இருந்து குறிப்பிட்ட தேதிக்குள் இயற்கை சீரழிவுகள், மாற்றங்கள் வரும் என்று சொல்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாட்டினுடைய விவரமும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் ஒரளவிற்கு நம்மால் கணிக்க முடியும். சில நாடுகளுடைய இயற்கை அமைப்புகளை வைத்து குறிப்பிட்ட கிரகங்கள் குறிப்பிட்ட நாடுகளை ஆள்கிறது என்ற கணக்கை வைத்திருக்கிறோம். ஆனால், மேலும் விளக்கம், உருவான ஆண்டு இதெல்லாம் கிடைத்தால் முழுமையாகக் கணிக்க முடியும்.

பொதுவாக, புத்த மத நாடுகள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதை முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் சனி புதன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். அதாவது கன்னி வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். 20.12.2011 வரைக்கும் சனி பகவான் கன்னியில் இருக்கிறார். புதன் புத்தமதத்திற்கு உரிய கிரகம். அங்கு சனி பகவான் இருக்கும் வரைக்கும் புத்த மத நாடுகள் எல்லாமே பாதிப்பிற்கு உள்ளாகும். இது நாம் ஏற்கனவே கணித்ததுதான். நமது வாசகர்களுக்கே தெரியும். குறிப்பிட்ட தேதிகள் எதையும் நாம் சொல்லவில்லை.

பூகம்பம் ஏற்பட்டு சுனாமி ஏற்பட்ட நாளில் அழிவிற்கு உரிய கிரகம் (கிருத்திகை) கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. ஆயுதப் பிரயோகம் செய்வது, திடீர் தாக்குதல் நடத்துவற்குரிய நட்சத்திரம் இந்த கார்த்திகை. பொதுவாக அசுவினி, பரணி, கார்த்திகை இந்த முதல் மூன்று நட்சத்திரங்களில் எந்த சுப காரியத்தையுமே செய்யமாட்டார்கள். இதில் அசுவினியில் நிறைய திருமணங்கள் நடப்பதெல்லாம் சகஜமாகிவிட்டது. பரணியும், கார்த்திகையும் இன்னமும் நடைமுறையில் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் அழிவிற்குரிய நட்சத்திரங்கள் என்று சொல்லக்கூடிய நட்சத்திரங்களில் வருகிறது.

இந்த கார்த்திகை நட்சத்திரத்தில்தான் இந்த சுனாமி தாக்குதல் நடந்திருக்கிறது. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது அடுத்தடுத்து தாக்குதல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் சில நட்சத்திரங்களில் சில இயற்கை சீரழிவுகள் ஏற்பட்டால் அது தொடரும் என்று சொல்லலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே, எப்படிப்பார்த்தாலும் பரவலாக பாதிப்புகள் இருக்கும்.

தற்போது மீனத்தில் குரு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மீனம் என்பது ஜல ராசி. அந்த மீனத்தில் இருக்கும் குருவை சனி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். மீனத்தை விட்டு குரு விலகுகிறார். மே 9ஆம் தேதியிலிருந்து மேஷத்திற்கு வருகிறார். அவ்வாறு போன பிறகு இன்னும் அதிகமான சுனாமிகளெல்லாம் தொடங்கும். 9.05.2011க்குப் பிறகு அதிகமான சுனாமிகள், கடற்கரையோர நகரங்கள், நாடுகளெல்லாம் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்