ஜெயலலிதா - சசிகலா மீண்டும் இணைவார்களா?

புதன், 28 மார்ச் 2012 (18:18 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: முதலமைச்சர் ஜெயலலிதா தனது இணை பிரியாத தோழியான சசிகலாவை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி விலகி இருக்கும் நிலையில், மீண்டும் இவர்கள் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? ஜோதிட ரீதியான எப்படி பார்க்கிறீர்கள்?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஜோதிட ரீதியாக இவர்கள் இருவரையும் பிரிப்பது கடினம். ஏனென்றால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ராசி சிம்மம். சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். அடுத்ததாக சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. ஜெயலலிதாவினுடையது புதனுடைய லக்னம். மிதுன லக்னம். சசிகலா ரேவதி நட்சத்திரம். அதாவது புதனுடைய நட்சத்திரம். இப்படி இவர்கள் இரண்டு பேருடைய ஜாதகம், தசா புக்தி எல்லாவற்றையும் பார்த்தால், ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த அமைப்பாக இருக்கும்.

FILE
ஒருகட்டத்தில் ஜெயலலிதாவிற்கு அஷ்டமத்துச் சனி வந்தபோது, 1997, 1998 காலகட்டத்தில் இவர்கள் இரண்டு பேரும் தற்காலிகமாக பிரிந்தார்கள். தற்போது சசிகலாவினுடைய மீன ராசிக்கு அஷ்டமச் சனி வந்திருக்கிறது. இந்த அஷ்டமச் சனி என்பது என்னவென்றால், அவமானப்படுத்தி வெகுமானத்தைக் கொடுக்கக் கூடியது. பொதுவாகவே அஷ்டமச் சனியினுடைய வேலையே அவமானப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது. யாருக்கு வந்தாலுமே அஷ்டமச் சனி எடுத்த எடுப்பிலேயே அசிங்கப்படுத்தும்.

ஆனால், இவர்கள் இரண்டு பேர் ஜாதகமும் பிரிக்க முடியாத ஜாதகம். சில ஒற்றுமைகள் மட்டுமல்ல, பல ஒற்றுமைகள் இவர்கள் ஜாதகத்தில் இருக்கிறது. சாதாரணமாகப் பார்த்தால், ஜெயலலிதா என்றால், ஜெயம் என்றால் செவ்வாய், லலிதா என்றால் சுக்ரனுடைய அம்சத்தில் வரும். இதுபோன்று செவ்வாயும் சுக்ரனும் சேர்ந்த பெயரை திருகுமங்கள யோகப் பெயர் என்று சொல்வார்கள். திருகு என்றால் சுக்ரன், மங்களம் என்றால் செவ்வாய். சசிகலா என்றால், சசி என்றாலும் சந்திரன், கலா என்றாலும் சந்திரன். இதுபோன்று இரண்டு சந்திரன் சேர்ந்தால் ஒரு சூரியன் உருவாகிறது. இரண்டு சூரியன் சேர்ந்தால் அது சந்திரனாகும். இதுபோன்று பல ஒற்றுமைகள் இவர்கள் இருவரின் ஜாதகத்திலும் பின்னிப் பிணைந்து இருக்கிறது.

அதனால் இவர்களின் நட்பு பிரிக்க முடியாத நட்பு என்று சொல்லாம். தற்போது சசிகலாவிற்கு மீன ராசி அஷ்டமத்துச் சனி நடக்கிறது. அதனால், அது கொஞ்சம் அவமானத்தை தந்து வெகுமானத்தைத் தரக்கூடியது. அஷ்டமச் சனியில் அசிங்கத்தைச் சந்தித்தால் அது நல்ல அறிகுறி என்றும் சொல்லலாம். அதனால், அஷ்டமச் சனியில் சில ஏமாற்றங்கள், இழப்புகள் இருக்க வேண்டும். நிறைய பேர் அஷ்டமச் சனியில் ஆட்சியைப் பிடித்து, ஆட்சியை இழந்தவர்கள் இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி இறந்தபோது, தி.மு.க. தலைவருக்கு அஷ்டமத்துச் சனி வந்தது. அந்த சமயத்தில் ஆட்சியைப் பிடித்தார். அதுபோன்ற அஷ்டமத்துச் சனியில் எது கிடைத்தாலும் நிற்காது. அதுபோன்ற அமைப்புதான் அது.

அதுமாதிரி, இழப்புகளையும் ஏமாற்றங்களையும் தரக்கூடியதுதான் இந்த அஷ்டமத்துச் சனி. ஆனால், அடுத்ததாக உயர்வையும் தரக்கூடியது. அதனால், இவர்கள் இருவருடைய நட்பு தொடரக்கூடியது. ஜோதிடப்படி சொல்கிறோம். கிரகங்கள் அடிப்படையில் பார்க்கும் போது, இரண்டு பேருடைய ஜாதகத்திற்கும் நிறைய தொடர்புகளும், இணைப்புகளும், நட்புகளும் இருக்கிறது. ஒருத்தருக்கு எது யோக கிரகமோ அதுவே மற்றொருவருக்கும் யோக கிரகமாக உள்ளது. இதுபோன்ற நிறைய விஷயங்கள் உண்டு.

சனி பகவான் மார்ச் முதல் செப்டம்பர் வரை உள்ள கால கட்டத்தில் வக்கிரமாகிறார். அதாவது மார்ச் மாத கடைசி காலகட்டத்தில், இந்த காலத்தில் இவர்கள் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஏனென்றால், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஏழரைச் சனி அமைப்புகள் வருகிறது. அதாவது 26.03.2012 இல் இருந்து 11.09.2012 காலகட்டத்தில் சனி பகவான் வக்கிரத்தில் கன்னி ராசிக்குப் போகிறார். இதுபோன்று கன்னிக்கு போகும் போது சிம்ம ராசிக்கு மீண்டும் ஏழரைச் சனி என்று சொல்வார்களே, அதுபோன்ற காலகட்டம் வரும். அந்த நேரத்தில் இந்த நட்பு தொடர்வதற்கான வாய்ப்புகளும், சாத்தியக்கூறுகளும் உள்ளது. அதனால், இவர்கள் பிரிவு என்பது தற்காலிகமானது. உறவு நீடிக்கும் என்பதே நிலையானது.

வெப்துனியாவைப் படிக்கவும்