தமிழ்.வெப்துனியா.காம்: சனித் திசை நடைபெறும் மாணவர்கள் பலரும் படித்துவிட்டும் உரிய வாய்ப்பு கிடைக்காமல் அல்லல்படுகிறார்களே. அவர்கள் என்ன செய்யலாம்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இவர்கள் நன்றாக படிப்பதற்கு ஊக்கமளிப்பதும் சனி பகவான்தான், இப்போது சுணக்கத்தை கொடுப்பதும் அவர்தான். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி என்று சனித் திசை நடப்பவர்களை பார்த்தீர்களானால், காலையில் எழுந்த படி என்று கூறினால் அதனை பெரிய தண்டனையைப் போல் பார்ப்பார்கள். படித்து முடித்துவிட்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு சீக்கிரம் வேலை வாய்ப்புக்கான அழைப்பு வரவது மிகவும் தாமதமாகும். இவர்கள்தான் ஏதாவது சிபாரிசு கிடைக்காதா, நண்பர்கள் மூலம் வாய்ப்பு கிடைக்காதா, நெட்டில் தேடலாமா என்றெல்லாம் முயற்சிப்பார்கள்.
பொதுவாக படித்து முடித்துவிட்ட நிலையில், சனி திசை நடக்கும் பிள்ளைகள், பெற்றோர்களோடு இல்லாமல், வேறு உறவினர்களோடு இருந்தால் அவர்களுக்கு நல்லது. வேறு மாவட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ இருக்க வேண்டும். சனி என்பது தியாகத்திற்குரிய கிரகம், வீட்டுச் சாப்பாடு, அம்மாவின் அன்பு பிணைப்பு போன்றவற்றையெல்லாம் தியாகம் செய்திடல் வேண்டும். எனவேதான் பிரிந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். அப்படிச் செய்தால் நல்ல வேலை கிடைக்கும். அதை விட்டுவிட்டு வீட்டில் இருந்துகொண்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு, வேலை தேடி பேப்பரை புரட்டிக்கொண்டிருந்தால் சனி பகவான் வேலை தர மாட்டார். எதையாவது தூக்கி எறிந்துவிட்டு வருகிறாயா, வா உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன் என்பவர் சனி. எனவே தியாகம் செய்தால் அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்பவர் சனி.
சனி பகவானைப் பற்றி யார் சொன்னாலும் என்ன சொல்கிறார்கள்? அதை இழந்தேன், இதை இழந்தேன், அப்புறம் இதெல்லாம் வந்தது என்றல்லவா கூறுகிறார்கள்? எனவே, படித்தேன், முடித்தேன், வேலை கிடைத்தது என்பதெல்லாம் ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி நடந்துக்கொண்டிருப்பவர்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் வெளியில் சென்று தங்குங்கள், கொஞ்ச நாள் புரட்டி எடுக்கும், அதன் பிறகு நல்ல வேலை கிடைத்துவிடும்.
சனி திசைக் காலத்தை சோதனைக் காலம் என்று கூறுவதற்குக் காரணம் இதுதான்.